புதன், 22 ஜூன், 2011

இந்தியாவுக்குக் கடைசி வாய்ப்பு


இலங்கை சிங்கள அரசின்மீது - அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேமீது போர்க்குற்றம் என்ற கருத்து - கோரிக்கை இப்பொழுது உச்சக் கட்டத்தில் இருக் கிறது.
காலம் தாழ்ந்தாலும் (அது மன்னிக்கப்பட முடியாததுதான்) அய்.நா. கொஞ்சம் அசைந்து கொடுத்திருக்கிறது. அதன் விளைவாக அது ஏற்பாடு செய்த விசாரணைக் குழு தெரிவித்துள்ள தகவல்களும் கருத்துகளும் - இப்பிரச்சினையில் குறட்டை விட்டுக் கொண்டிருந்த நாடுகள்கூட விழிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டது.

இந்தியாவுக்கும் எல்லாம் தெரியும் என்றாலும் அது நம் மக்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு விட்டது.

வெளிநாட்டுக் கொள்கை - ராஜதந்திரம் என்று அது சொல்லிக் கொள்ளலாம்; ஆனால் அதிலும்கூட அது பலத்த தோல்வியைத் தான் கண்டு இருக்கிறது.

சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையின் மஞ்சத்தில் தான் கொஞ்சிக் கொண்டு இருக்கின்றன. சீனா இலங்கைத் தீவில் இந்தியாவை அச்சுறுத்தும் தளங் களை வலுவாகவே கட்டிக் கொண்டு இருக்கிறது; இந்த நிலையில் என்ன ராஜதந்திரம் இதில் வாழு கிறது?

இன்னும் சொல்லப் போனால் புலிக்குப் பயந்தவன் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்ற தோரணையில், எதிரும் புதிருமான நாடுகளான சீனா, பாகிஸ்தான் இந்திய நாடுகளையும் தன்வசம் ஆக்கிக் கொண்டு விட்டது இலங்கை. உண்மையைச் சொல்லப் போனால், ராஜ தந்திரம் என்று எடுத்துக் கொண்டாலும் இதில் இலங்கைத் தீவின் கைதான் ஊட்டத்துடன் ஓங்கி நிற்கிறது.

இதில் இங்கிலாந்து நாட்டின் செயல்பாடும், மனித நேயமும் சிலிர்க்க வைக்கின்றன. இதற்கு முன் லண்டன் தொலைக்காட்சி, ஈழத்தில் இலங்கைப்படை நடத்திய கொடூரமான வேட்டையை வெளிப்படுத் தியது. குருதியே உறைபனியாகி விட்டது.

இப்பொழுது அடுத்தகட்ட (Channel 4) ஒளிபரப்பில் அதிலும் படுகொடுமையான காட்சிகளை வெளிச்சத்துக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. (Sri Lanka’s Killing Fields)

பிடிபட்ட விடுதலைப்புலிகளை நிர்வாணப்படுத்தி, கைகால்களையும், கண்களையும் கட்டி வெட்ட வெளியில் நிறுத்தி சுட்டுக் கொல்லும் காட்சிகள்  காணக் கொடூரம்! பெண் விடுதலைப்புலிகளும் இந்தச் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தமிழினத்தில் பிறந்த ஒரு இளைஞனைக் குழியில் நிறுத்தி, அவரது உடலைக் கிழித்துக் கொல்லுவது போன்ற கொடூர காட்சி! இவ்வாறு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிறது என்றால் கொலை வெறி மிருகத் தனத்தின் கோர நிலையை உய்த்துணர முடியும்.

இனியும் தாமதமா? இதற்குக் காரணமான குற்றவாளி இன்னும் தண்டிக்கப்படவில்லையா? என்ற தார்மீகக் கோபம் (பார்ப்பனர்களைத் தவிர) யாருக்கும் வரத்தான் செய்யும் - வரவும் வேண்டும்.

ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னாவில் உள்ள மனித உரிமைக் கழகத்தில் விவாதிக்கப்பட்டது; அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஆதரவுடன், ராஜபக்சேமீது போர்க் குற்ற விசா ரணையை நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

வெட்கக்கேடு என்ன என்றால், பொதுவுடைமை நாடுகள் என்று பீற்றிக் கொள்ளும் ருசியாவும், சீனாவும் அதனோடு சேர்ந்து இந்தியாவும் பாசிஸ்டு ராஜபக்சேவுக்குச் பச்சைக் கொடி காட்டி, தமது பிற்போக்குத்தனத்துக்கு தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்டன.

இந்தோனேசியா, அமெரிக்கா, தெ.ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த சட்ட நிபுணர்கள் மூவர் கொண்ட குழுவால் அய்.நா.வின் ஆணைப்படி ஈழத் தீவில் நடத்தப்பட்ட மனித விரோதங்கள்மீது விசாரணை நடத்தி அறிக்கையையும் கொடுத்து விட்டது. ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களின் குவியலாக அவ்வறிக்கை அமைந்து விட்டது.

இங்கிலாந்து நாடாளுமன்றம் கண்டனம் தெரிவிக் கிறது. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் நாடாளுமன்றத்தில் அழுத்தமாகக் கூறிவிட்டார்.

உலகநாடுகள் மத்தியில் இந்தியா கம்பீரமாக நடக்க வேண்டும் என்றால், இதுவரை நடந்து கொண்ட தவறுகளுக்குக் கழுவாய்த் தேட வேண்டும் என்றால், இந்தக் கட்டத்திலாவது இந்தியா அனைத்தும் கெட்டுப் போன தனது பழைய நிலையிலிருந்து விடுபடட்டும்!

இல்லையென்றால் எந்தப் பிரச்சினையிலும் கருத்துத் தெரிவிக்கும் அடிப்படை உரிமையையும் இழந்துவிடும் - இந்தியாவின் மரியாதை காப்பாற்றப்படட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக