புதன், 22 ஜூன், 2011

மீண்டும் உமாபாரதி


பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கிய செல்வி உமாபாரதி மீண்டும் பிஜேபியில் சேர்ந்துள்ளார். அவரைப் பொறுத்த வரையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் - அதன் காரணமாக அக்கட்சியால் பல வகைகளிலும் ஒதுக்கப்பட்டவர் - வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் குப்பஹள்ளி சீதா ராமய்யா சுதர்ஸன் என்பவர் பிஜேபி தலைவர்களைச் சாடும்போது உமாபாரதியையும், அவர் பிறந்த பிற் படுத்தப்பட்ட குடும்பம்பற்றியும், வளர்ப்பு முறைபற்றியும் இழிவுபடுத்திப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஸனுக்கு உமாபாரதியின் அண்ணன் கன்யாலால் கடிதம் ஒன்றை எழுதினார்.

எனக்கு 70 வயது ஆகிறது. உமாபாரதி பிறப்பதற்குமுன் நான் கம்யூனிஸ்டாக இருந்தேன். ஆர்.எஸ்.எஸின் கோட்பாட்டை ஆதரிப்பவனாக நான் எப்பொழுதுமே இருந்ததில்லை.

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் நலன்களையே முக்கியமாகப் பாதுகாக்கும் நோக்கத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையிலிருந்து சங்கம் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை என்பது உங்களது கருத்தால் தெளிவாகிவிட்டது. இதனால் அதன்மீது எனக்குள்ள வெறுப்பு அதிகரிக்கவே செய்யும் (தி இந்து 12.4.2005 பக்கம்11)

செல்வி உமாபாரதியும் பா.ஜ.க. ஒரு பார்ப்பன உயர் ஜாதி அமைப்பே என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறியவர்தான்.

1996 ஏப்ரல் 25 அன்று மத்தியப் பிரதேச போபால் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் செல்வி உமாபாரதி (பா.ஜ.க. இளைஞர் பிரிவு செயலாளராக அப்பொழுது இருந்தார்) மிகவும் வெளிப்படையாக ஒரு கருத்தை அழுத்திச் சொன்னார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தங்கள் கொள்கைகளில் நிலையற்றவர்களாக இருக்கிறார் கள்.

கட்சியின் தலைமை மேல் ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்குள்ளேயே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக வழங்கப்படுவதில்லை.

வேறு பாட்டுக் கண்ணோட்டத்தோடு பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினருக்கே அதிக வாய்ப்பும் தரப் படுகின்றன. இது மிக பெரிய சமூக அநீதியாகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களாக இருக் கிறார்கள் என்பதற்காக அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா? என்று காரசாரமாக உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்வுகளைக் கொட்டினார்.

பா.ஜ.க.வின் அறிவு ஜீவி என்று கூறப்படும் கோவிந்தாச்சார்யா ஒரு திட்டத்தைக் கட்சிக்குக் கொடுத்தார் ‘‘Social Engineering’’ என்று அது கூறப்பட்டது. பார்ப்பனத் தலைவர்களை நீக்கி அந்த இடத்தில் பிற்படுத்தப்பட்டவர்களை மாநிலத்தலைவர் களாக நியமிக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும்.

அதன்படிதான் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கல்யாண்சிங், குஜராத்தில் ஒரு மோடி, மத்தியப் பிரதேசத்தில் ஒரு உமாபாரதி, பீகாரில் ஒரு சுசில்மோடி என்ற நியமனங்கள் நடந்தன. ஆனாலும் அதனை நீடிக்கவிடவில்லை கட்சியின் உயர்ஜாதி ஆதிக்கம்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற காரணமாகவிருந்த உமாபாரதி அம்மாநில முதல் அமைச்சராக்கப்பட்டார். கருநாடக மாநிலம் வழக்கு ஒன்றில், முதல் அமைச்சர் உமாபாரதி குற்றஞ் சாட்டப்பட்ட நிலையில் முதல்வர் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது. அந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் முதல் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டு இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் என்ன நடந்தது? நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி ஜெயலலிதாவுக்குப் பதிலாக ஓ.பன்னீர்செல்வம் அமர்த்தப்படவில்லையா?

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் மீண்டும் செல்வி ஜெயலலிதா முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வில்லையா? அதே நிலை செல்வி உமாபாரதிக்கு பா.ஜ.க.வின் பார்ப்பனத் தலைமையால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதையெல்லாம் மறந்துவிட்டு செல்வி உமாபாரதி மீண்டும் பி.ஜே.பி.யில் சங்கமம் ஆகிறது என்றால், அது ஒரு பரிதாப நிலையே!

மீண்டும் பி.ஜே.பி.க்கு வந்தாலும் மீண்டும் பழைய கசப்பான அனுபவங்களே அவரைச் சுற்றிச் சுற்றி வரும் என்பதில் அய்யமில்லை, அது பாரதீய ஜனதா அல்ல, பார்ப்பனீய ஜனதாவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக