புதன், 22 ஜூன், 2011

சமச்சீர் கல்வியும் மக்களின் நிலைபாடும்


அ.இ.அ.தி.மு.க. அரசின் ஒரு மாத சாதனைகள் குறித்து லயோலா கல்லூரி 3132 பேரிடம் ஆய்வு நடத்தியதாக ஒரு செய்தி வெளிவந்தது. இத்தகு ஆய்வுகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது ஒருபுறம் இருந்தாலும்,

அந்த ஆய்வின் அடிப்படையில் பார்த்தாலும் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு 62.3 சதவிகித மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்பதை தமிழ்நாடு முதல் அமைச்சர் கருத்தில் கொள்வது நல்லது.

தி.மு.க. அரசு கொண்டு வந்தது என்பதற்காக அத்திட்டத்தை ரத்து செய்யும் முடிவைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர வேண்டும்.

யாரோ சில உயர்ஜாதிக்காரர்கள், உயர் ஜாதி மனப்பான்மையுடன் சமச்சீர் கல்வித் திட்டம் கூடாது என்று கூறுவதை அரசு ஏற்கத் தேவையில்லை.

அவர்கள் ஏதோ உயர்தரமான பாடத் திட்டங்களைப் படித்துக் கொண்டு இருப்பதாகவும், இந்த சமச்சீர் கல்வித் திட்டம் அந்த உயர் தரத்தைக் கீழே தள்ளி விடுவதாகவும் கூறுவதை ஏற்றுக்  கொண்டால், இந்த அரசு அந்த மேல் தட்டு மக்களின் ஆசையை நிறைவேற்றும் அரசாகவே கருதப்படும். பெரும்பான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத எந்த முடிவும் அரசுக்கு எதிர்ப்பாக மாறும் என்பது பால பாடமாகும்.

முந்தைய அரசின் கால கட்டத்தில் உருவாக்கப் பட்டது என்பதற்காக செம்மொழி லட்சனையான திருவள்ளுவர் படத்தின்மீது ஸ்டிக்கர் ஒட்டுவது எல்லாம் கண்டிப்பாக எதிர்விளைவையே ஏற்படுத் தும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.

பாடத் திட்டங்களைத் தயாரித்தவர்கள் கல்வி யாளர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமச்சீர் கல்வித் திட்டத்துக்காகக் கல்வி யாளர்கள் - விற்பன்னர்கள் கடுமையாக உழைத் திருக்கிறார்கள் - இதற்காக நூல்கள் அச்சிடுதல் உள்பட 500 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்குச் செலவு ஏற்பட்டுள்ளது.

இப்பொழுது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்தை ஜூலை மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப் பிக்க வேண்டும். நாள்தோறும் வழக்கு நடை பெற்றாலும்கூட ஜூலை மாத இறுதியில் தீர்ப்பு அளிக்கப்படும்.

அதற்குப் பிறகு நூல்களை அச்சிடுவது என்று ஆரம்பித்தால் ஆகஸ்டு, செப்டம்பர் வரை நீண்டு கொண்டே போனால், இவ்வாண்டு மாணவர்களின் படிப்பு எந்த கதிக்கு ஆளாக நேரிடும் என்பதைக் கவலையுடன், பொறுப்புணர்ச்சியுடன் சிந்திக்க வேண்டாமா?

கல்வி என்பது என்ன கடைச் சரக்கா?

கடந்த ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் படித்தவர்கள் இந்த ஆண்டு முறையே இரண்டாம் வகுப்பிலும் ஏழாம் வகுப்பிலும் சமச்சீர் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் கல்வி பயில்வது தானேமுறையானது?

இல்லை - இல்லை அவர்கள் பழைய கல்வித் திட்டத்தின் அடிப்படையிலான பாடப் புத்தகங் களைத் தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது சரியானது தானா?

இந்தப் பிரச்சினையை அரசியல் கண்கொண்டு பார்க்காமல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்துக் கட்சிகளும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொது மக்களாகிய பெற்றோர்களும் அரசினை வற்புறுத்த வேண்டாமா? ஊடகங்களும், தன் ஒழுக்கமான கடமையினைச் செய்ய வேண்டாமா?

தந்தை பெரியார் அவர்களின் விடா முயற்சி யாலும் பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் கடமை உணர்வாலும், ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி ஏணியில் படிப்படியாக மேலே வந்தார்கள்.

அவர்களை அரசியல் காரணங்களுக்காக குப்புறத் தள்ளிவிட வேண்டாம்! அரசு என்பது முந்தைய அரசின் தொடர்ச்சிதானே தவிர முந்தைய ஆட்சியின் திட்டங்களை மூட்டைக்கட்டி வைக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற நினைப்பு ஆபத்தானது! ஆபத்தானது!!


.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக