புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
இலங்கை அதிபர் சிங்கள வெறியர் ராஜபக்சேயை நோக்கி எல்லாத் திசைகளிலிருந்தும் கண்டனக் கணைகள், எதிர்ப்பு அலைகள் மிகக் கூர்மையாகப் புறப்பட்டு விட்டன.

விடுதலைப்புலிகள் சிங்கள அரசுக்கிடையே சமரசப் பேச்சு வார்த்தைகள் நடத்தி சமரசம் செய்து வைக்கப் பாடுபட்ட நார்வே நாட்டின் நீதிமன்றத்திலேயே ராஜபக்சேமீது நடவடிக்கை எடுக்க வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் சிங்கள இராணுவப் படையின் கண்மூடித்தனமான தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் - இப்பொழுது நார்வேயில்  வாழ்ந்து வருபவர்கள் தங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழர் அமைப்பின் சார்பில் இந்த வழக்கினைப் பதிவு செய்துள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சே அவரது உடன் பிறப்பும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கொத்தபாய ராஜபக்சே. இலங்கையின் அன்றைய இராணுவத் தளபதி பொன்சேகா உள்பட பலரின்மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் அப்பாவிப் பொது மக்களை சிங்களப்படை தாக்கி அழித்தது. இராணுவத்தால் பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியில், இராணுவத்தின் வாக்குறுதியை நம்பி தஞ்சம் அடைந்த தமிழர்கள், ஆயிரக்கணக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளையும் தாக்கி அழித்தனர் என்று அய்.நா. வல்லுநர் குழு அறிவித்துள்ளதை குற்றச்சாற்றில் குறிப்பிட்டுள்ளனர்.

ஈழப் போரில் இறுதிக் கட்டத்தில் சமாதான வெண் கொடியை ஏந்திச் சென்ற விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்டோரை சிங்களப் படையினர் குரூரமாகக் கொன்று தீர்த்தனர்.

இவை பச்சையான போர்க் குற்ற செயல்கள் ஆகும். இவற்றின்மீது விசாரணை நடத்தி ராஜபக்சே உள்ளிட்டோருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த முக்கிய வழக்கில் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த நார்வே நாட்டு அமைச்சர் எரிக் சோஹை சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் அமைப்பதற்கான ரோம் உடன்பாட்டில் நார்வே அரசும் கையொப்பமிட்டுள்ளது. பன்னாட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிமுறைகளை நார்வே அரசுப் பின்பற்றி வருகிறது. எனவே போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்மீது நார்வே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். அந்த அடிப்படையில்தான் நார்வேயில் உள்ள ஈழ அமைப்பு இந்த வழக்கினைத் தொடர்ந்துள்ளது.

நாள் ஆக ஆக இலங்கை அதிபருக்கு நெருக்கடிகள் முற்றி வருகின்றன. வரும் 16ஆம் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அய்.நா. மன்றத்தின் முன் பன்னாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திட உள்ளனர். ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல; மனித உரிமை ஆர்வலர்கள், மனித நேயர்கள் மத்தியிலும் இந்தக் குரல் வலுத்து வருகிறது.

உண்மையில் இந்தப் பிரச்சினையில் தூங்குவது போல பாசாங்கு செய்வது இந்திய அரசுதான். இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிரச்சினையில் முந்தி நின்று குரல் கொடுக்க வேண்டிய பாத்திய தையும், கடமை உணர்வும், மற்ற மற்ற நாடுகளைவிட இந்தியாவிற்கே முதன்மையான இடமாக இருந் திருக்க வேண்டும். நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, விழுந்து குதறாமல் இருந்தால் சரி என்று சொல்லுவதுபோல, இந்தியா இந்தப் பிரச்சினையில் கொடுங்கோலன் தமிழினத்தைப் பூண்டோடு அழித்து முடிக்க வெறி கொண்ட வேங்கையாகத் திரியும் ராஜபக்சேவுக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கிறது என்றால், இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!

பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் இலங்கையில் நடப்பது பச்சையான இனப்படுகொலை என்று தெரிவித்தாரே - மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு - இதனைக் கவனத்தில் கொண்டதாகத் தெரிவில்லையே!

இந்தியாவின் இத்தகு நடவடிக்கைகள் உலக நாடுகளில் அதற்கு இருந்த மரியாதையை வெகு வாகக் குறைந்துவிட்டதைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் நடந்து கொள்வது வருந்தத்தக்கதே!

மத்திய ஆட்சியின்மீதும், அதனைச் சார்ந்த காங்கிரஸ்மீதும் தமிழ்நாடு மக்கள் கொண்டிருக்கும் அதிருப்திக்கு எல்லையே இல்லை.

இனியாவது திருந்துமா? தமிழ்நாடு மட்டுமல்ல - உலகமே எதிர்பார்க்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக