புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த விவகாரம் - இதற்குக் காரணமான சிங்கள இனவெறியரும் அந்நாட்டின்  அதிபருமான ராஜபக்சேமீது பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, போர்க் குற்றவாளி என்று அறிவிக்கக் கூடிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளிலும்கூட, இந்தத் திசையில் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன.

மே 18ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அய்.நா. மன்றத்தின் முன்பு ஒன்பது அமைப்புகள் ஒன்றுகூடி பேரணியையும், ஆர்ப்பாட்டத்தையும் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

உலகின் பல நாடுகள் ராஜபக்சேமீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திட ஆரம்பித்து விட்டன.

இந்த நிலையில், உலக மக்களின் கண்களில் மண்ணைத் தூவிட எதையாவது தமிழர்களுக்கு அனுசரனையாக இருப்பதுபோல வித்தை செய்து காட்ட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் அதிபர் ராஜபக்சே; அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.

இது குறித்து இலங்கை அரசின் சார்பில் கேசலிய நம்புக்கவெலக் கூறுகையில், இலங்கைப் நாடாளு மன்றத்தில் மேல் சபை (செனட்) ஒன்று உருவாக்கப் படும் என்றும், அதில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கவில்லை; யாழ்ப்பாண உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில், மேல் சபை மட்டுமே தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. அதிகாரப் பகிர்வுதான் முக்கியம்; அதைத்தான் எமது மக்கள் விரும்புகிறார்கள்.

இதற்குத்தான் முன்னுரிமை தர வேண்டும்; மேல் சபை என்பது அதில் ஓர் அங்கமாக இருக்கலாம்; மற்றபடி தமிழர்களின் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதுதான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்புகூட ஈழத் தமிழர்களுக்காக இலங்கை சிங்கள அரசு பல திட்டங்களை அறிவித்த துண்டு.

ஜெயவர்த்தனே  ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப் பட்ட 13ஆவது சட்டத் திருத்தம்; திருமதி சந்திரிகா அம்மையாரால்முன் வைக்கப்பட்ட - 2000ஆவது ஆண்டு அரசமைப்புச் சட்டத் திருத்தம்; 64 நாடுகளும் சிறீலங்கா அரசும், தமிழ்ப் போராளிகளும் பங்கு கொண்டு இயற்றிய ஆஸ்லோ பிரகடனம் (5.12.2002) இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவால் அமைக்கப் பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு   அதிகாரப் பரவல் பற்றித் தயாரித்த அறிக்கை என்ன கூறுகிறது?

உள்நாட்டுச் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒன்றுபட்ட சிறீலங்கா ஒரு கூட்டாட்சி அமைப்புடைய தாக இருக்கும்; ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று; கல்வி, வேலை வாய்ப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கைக்குரிய விகிதாச்சாரம் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு.

சிறீலங்கா பல இன பல மத - பன்மொழி நாடாக இருக்க வேண்டும். ஒரு இனத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக இருந்தால், மற்ற இனங்களிலிருந்து (தமிழர், முசுலிம்) இரு துணை ஜனாதிபதிகள் இருக்க வேண்டும். நாடாளுமன்றம், மக்களவை, செனட் சபை என்று இருக்க வேண்டும்.

அந்த இரு துணை ஜனாதிபதிகளில் ஒருவர் மாநிலப் பிரதிநிதிகளைக் கொண்ட செனட் சபைக்குத் தலைமை தாங்க வேண்டும். மற்றொரு துணை ஜனாதிபதி பெரும் பதவிகளுக்கான ஆணைக் குழுவின் தலைவராக இருக்க வேண்டும் என்றெல்லாம் வல்லுநர் குழு பரிந்துரைத்ததே இவற்றில் எதனை நடைமுறைப் படுத்தினார் மகிந்த ராஜபக்சே?

ஊரையும், உலகத்தையும் ஏமாற்றிட, தமிழர் களுக்கு ஏதோ உரிமைகள் தர இருப்பதுபோல கிளுகிளுப்பை ஆட்டுகிறார்.

இதற்குமுன் எத்தனை எத்தனையோ வாய்ப்புகள் இலங்கை அதிபர்களுக்குக் கிடைத்தன. அவற்றைச் செயல்படுத்திட முன்வரவில்லை.

பல்லாயிரம் மக்களைப் பலி கொடுத்ததற்குப் பிறகு தனியீழம் ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்ற உறுதியான நிலைப்பாடு உலக மக்கள் மத்தியில் பரிணமித்த ஒரு கால கட்டம் இது!
ராஜபக்சே விரிக்கும் சாகச வலையில் தமிழின எம்.பி.க்களோ மற்றவர்களோ விழத் தயாராக இருக்க மாட்டார்கள் - இருக்கவே மாட்டார்கள் என்று நம்புவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக