புதன், 22 ஜூன், 2011

சாமியார்களா- அரசியல்வாதிகளா?


ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு இருப்பதாகக் கூறும் ராம்தேவ் மேற்கொண்ட வழிமுறைகளில் ஒழுக்கம் இருக்க வேண்டாமா?
டில்லி காவல்துறை இது குறித்துக் கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கதும், முக்கியமானதுமாகும்.
யோகா பயிற்சி முகாம் நடத்துவதாக பாரத் ஸ்வாமி மான் அறக்கட்டளை விடுத்த விண்ணப்பத்தின்மீது அதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் முகாமில் யோகா பயிற்சி அளிக்கப்படவில்லை. அதற்கு மாறாக அரசியல் பேசும் மேடையாக அது மாற்றப்பட்டது.
அரசியல் கட்சியின்மீதும், தலைவர்கள்மீதும் அவ தூறுகள் அள்ளி வீசப்பட்டன. அதன் காரணமாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கானவர்களைக் கூட்டி வைத்து திடீரென்று உண்ணாவிரதம் இருந்தது எந்த வகையில் நேர்மையானது - சரியானது?
சட்டத்தைமீறி உண்ணாவிரதம் இருந்தவரை அப் புறப்படுத்த காவல்துறை முயன்றது எப்படி குற்றமாகும்? காவல்துறையினரை ஏமாற்றிட கூட்டத்துக்குள் ஓடிச் சென்று பதுங்கிக் கொள்வதும், பெண் வேடம் போட்டுக் கொண்டதும் எந்த வகையில் பாராட்டத்தகுந்தது?
ஒரு நாலாந்தர மனிதனின் நடவடிக்கையைச் சேர்ந்தது இது அல்லவா! ராம் தேவை வெளியேற்றியது குறித்துக் கண்டனம் தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள், ராம்தேவ் நடந்து கொண்ட சட்ட விரோத, ஏமாற்றுத் தனமான நடவடிக்கை குறித்து விமர்சிக்க முன் வராதது - ஏன்?
காவல்துறையினரை நோக்கி கற்களையும், பூந் தொட்டிகளையும் ராம்தேவ் ஆதரவாளர்கள் வீசினால் காவல்துறையினரின் கைகள் பூப்பறித்துக் கொண்டு இருக்குமா?
ராம்தேவுடன் சாத்வி ரிதம்பரா வந்தது என்ன? ராம்தேவைக் கைது செய்ததற்காக அத்வானி ஏன் ஆர்ப்பரிக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையா? ராம்தேவ் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 24 மணி தர்ணாவுக்கு பா.ஜ.க. ஏன் அழைப்புக் கொடுக்க வேண்டும்?
இந்த சாமியாருக்கு 1000 கோடி ரூபாய் சொத்து எங்கிருந்து வந்தது என்ற திக் விஜய் சிங்கின் கேள்விக்கு நாணயமான முறையில் பதில் கூற வேண்டாமா? ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் முதலில் தங்களுக்கு இவ்வளவுப் பெரிய அளவில் சொத்து எங்கிருந்து வந்தது என்பதற்கான விளக்கத்தை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டாமா?
இந்த ராம்தேவ் யார்? அவருடைய உதவியாளர் யார்? என்ற கேள்வியையும் திக் விஜய் சிங் எழுப்பியுள்ளார். அந்தப் பாலகிருஷ்ணா ஆச்சாரியா ஒரு கிரிமினல் பேர் வழி என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். போலியாக பாஸ்போர்ட் தயாரித்த குற்றவாளி என்றும் கூறியுள்ளார்.
இத்தகைய கிரிமினல்தான் யோக்கியர்(?) ராம்தேவின் உதவியாளர் என்றால் அவரின் யோக்கியதை என்ன? பொது மக்கள் கேட்க மாட்டார்களா? இதைப்பற்றி எல்லாம் ஊடகங்களோ, அரசியல் கட்சித் தலைவர்களோ ஏன் விமர்சனம் செய்ய முன்வரவில்லை?
இதில் இன்னொரு முக்கிய கேள்வி. ஊழலை ஒழிப்பதுதான் இவர்களின் முக்கிய இலக்கு என்றால் முதலில் இவர்கள் களம் அமைக்க வேண்டிய இடம் பா.ஜ.க. ஆளும் பெங்களூருதானே?
பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம் குறித்து இந்த உத்தமப்புத்திரர்கள் வாய் திறந்துள்ளார்களா? அது எப்படி வாய் திறப்பார்கள்? இவர்கள்தான் பா.ஜ.க.வின் கைப்பாவைகள் ஆயிற்றே!
எல்லா வகைகளிலும் பா.ஜ.க., வீழ்ச்சியுற்று வரும்போது அதிலிருந்து மக்களைத் திசை திருப்பிட இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. போகப் போக இது இன்னும் தெளிவாக வெளிச்சத்துக்கு வரத்தான் போகிறது.
இவர்தான் சாமியார் ஆயிற்றே - ஏன் போராட்டத்தில் இறங்க வேண்டும்? சாமியார்களின் வேலை தபசு இருந்து கடவுளிடம் மனுபோட வேண்டியதுதானே? பகவானே, இந்த இலஞ்ச லாவண்ய குணத்தை ஆட்சியாளர்களின் மனத்திலிருந்து அகற்று! அதற்காக யாகம் செய்கிறேன் என்று மன்றாட வேண்டியதுதானே!
அதை விட்டுவிட்டு அரசியல்வாதியைப் போல் ராம்தேவ் ஏன் போராட்டத்தில் இறங்க வேண்டும்? ஆன்மீகவாதிகள் ஏன் ராம்தேவைக் கண்டிக்க முன்வர வில்லை?
டில்லியில் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அரங்கேற்றுவது - மக்களைத் திரட்டுவது - அதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவது - அதன்மூலம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது - அதற்கு மாற்று அகில இந்திய அளவில் பா.ஜ.க.தான் என்று முன்னிறுத்துவதுதான் இந்த நாடகத்தின் பின்னணி இரகசியமாகும்!
ஏற்கெனவே இருக்கும் சட்டங்களே ஊழிலை ஒழிக்கப் போதுமானது. அவற்றை ஒழுங்காக அமல்படுத்தினாலே போதும் - அதனை அரசுகள் செய்யட்டும்! தேவை யில்லாமல் சாமியார்களைக் கெ()ஞ்சும் வேலையில் இறங்க வேண்டாம்.

1 கருத்து:

  1. மதவாதிகளும், மதங்களும் அரசியலில் மூக்கை நுழைப்பதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும், இந்து சாமியர்கள் மட்டுமல்ல, முஸ்லிம், கிறித்தவம் என்ற எந்த சாமியார்களும் தான் ..

    **************************

    ஒரு டாலர் திருடினால் தப்பா ?

    பதிலளிநீக்கு