புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் ஆடை அணி வகுப்பு நடந்தது. அதில் பங்கேற்ற மாடல் அழகிகளின் ஆடை களில் இந்துப் பெண் கடவுள்களின் உருவங்கள் இடம் பெற்றிருந்தன.
இதற்கு இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன - என்று நாளேடுகளில் சேதி ஒன்று வெளி வந்துள்ளது.

இது ஒன்றும் முதன்முறையாக நடக்கக் கூடிய ஒன்றல்ல. இதற்கு முன்புகூட செருப்புகளில், கழிவறைச் சாதனங்களில்கூட இந்துக் கடவுள்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டதுண்டு. பிரான்சு நாட்டில் ஒரு நிறுவனம் தன்னால் உற்பத்தி செய்யப்படும் காலணியில் ராமர் படத்தைப் பொறித்திருந்தது. அப்பொழுதும் இங்குள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துக் கூச்சல் போட்டதுண்டு.

உலகில் பல மதங்கள், அந்த மதங்களின் கடவுள்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் கடவுள்களின் படங்களையெல்லாம் ஆடைகளிலும், காலணிகளிலும் பொறிக்காமல், இந்துக் கடவுள்களை மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி  முக்கியமானது.

இந்து மதமே ஆபாசத்தின் உற்பத்திக் கிணறு - அதன் கடவுள்களின் பிறப்புகளும் நடத்தைகளும் அருவருப்பும் ஆபாசமும் நிறைந்தவை. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பாலியல் தொடர்பான அருவருப்புகளை இந்து மதத்திலிருந்து விலக்கி விட்டால், அப்படியொரு மதமே பெயர் சொல்லக்கூட இருக்காது - இருக்கவே இருக்காது.

இந்து மதத்தின் மூலம் ஓம் சக்தி என்றால் அது ஆண் - பெண் உடலுறவைக் குறிப்பதாகும். முழு முதற் கடவுளுக்கு அடையாளமாக சிவலிங்கத்தை வைத்துப் பூசை செய்கின்றனர் என்றால் அந்த வடிவமும் ஆண் - பெண் புணர்வை வெளிப்படுத்தும் அடையாளமாகும்.

யானை முகத்தானான விநாயகன் எப்படி பிறந்தான் என்று கேட்டால், சிவன் ஆண் -யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும் புணர்ந்து பெற்ற பிள்ளைதான் விநாயகன்  என்று புராணம் எழுதி வைத்துள்ளார்கள் -

திருஞான சம்பந்தனும் தேவாரத்தில்,  பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே!

(திருவலிவலம் கோயில் கொண்ட சிவனைப்பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது.  பிடி - பெண் யானை, உருவுமைகொள - உருவத்தைப் பார்வதி தேவியார் கொள்ள, கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்) நாகை மாவட்டம் வலி வலம் எனும் கோயிலில் இந்தப் பாடல் பொறிக்கப்பட்டும் உள்ளது.

இந்த யோக்கியதையில் இந்து மதத்தின் சக்தியும் சிவனும் கற்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து மதக் கடவுள்களின் உருவங்களை எதில் பொறித்தால் என்ன? பொத்துக்கொண்டு கோபம் வருவதற்கு நியாயம் எங்கே இருக்கிறது?

அய்யப்பன் யார் என்றால், ஹரிஹரப்புத்திரன் என்கிறார்கள். ஹரி என்றால் விஷ்ணு; ஹரன் என்றால் சிவன். விஷ்ணு என்ற ஆண் கடவுளுக்கும் சிவன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவன்தான் ஹரிஹரப் புத்திரனான அய்யப்பன் என்று புராணம் எழுதி வைத்து - அப்படிப் பிறந்த பிள்ளைக்கு 40 நாள் விரதம் (ஒரு மண்டலம்) இருந்தும், நீண்ட தூரம் பயணம் செய்தும், கும்பிடுத் தண்டம் போடும்  இந்துக்கள் ஆஸ்தி ரேலியாவில் பெண்கள் ஆடையில் இந்துக் கடவுள் உருவம் பொறிப்பதா என்று எண்ணெய்யில் குதிக்கும் பொரி போல துடிப்பதில் ஏதாவது அர்த்தம் உண்டா?

பெண்கள் ஏன் நெற்றியில் குங்குமம் வைத்திருக் கிறார்கள் என்றால், அது சிவன் தலையில் இருக்கும் கங்காதேவியின் மாதவிடாய் என்கிறார்கள்.

இதெல்லாம் ஆபாசம் இல்லையா? சிவபுரம் நடராசனை கடத்திக் கொண்டு போய் அமெரிக்காவில் நாட்டன் துரையிடம் விலைக்கு விற்கப் படவில்லையா? அவன், நடராசன் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதனை சிகரெட் (ஆஷ் ட்ரே) கிண்ணமாக பயன்படுத்தவில்லையா? நடராஜக் கடவுள் நார்ட்டன் துரையைச் சாம்பலாக்கி விட்டாரா?

இந்துக் கோயில்களிலும், கோபுரங்களிலும் தேர்களிலும் எவ்வளவு ஆபாசமாகப் பொம்மைகள் வடிக்கப்பட்டுள்ளன! அவற்றைப் பார்க்கும் இருபால் இளைஞர்கள் மனத்தை ஒரு முகப்படுத்திப் பக்தி செலுத்தத்தான் முடியுமா? மாறாகக் கோயில்களே வேறு காரியத்துக்குத்தானே பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும்.

முதலில் இந்துத்துவாவாதிகள் ஒழுக்கமான, அருவருப்புக்கும் ஆபாசத்துக்கும் இடமில்லாத ஒரு கடவுளைப் புதிதாகவாவது உற்பத்தி செய்து கொண்டால், ஆஸ்திரேலியாவிலோ, வேறு நாடுகளிலோ இந்து மதக் கடவுள்களைக் கொச்சைப்படுத்தும் நிலை ஏற்படா தல்லவா!
கொஞ்சம் யோசியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக