புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பாரதீய ஜனதா ஆளும் கருநாடக மாநிலத்தில் சடுகுடு விளையாட்டு நாள்தோறும் நடந்து கொண்டு இருக்கிறது; நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற பழமொழி கருநாடக மாநில பா.ஜ.க. ஆட்சியையே சாரும்.

தென் மாநிலத்தில் பா.ஜ.க. வேரூன்ற வேண்டும் என்று கஜ குட்டிக்கரணம் போட்டு, கடைசியில் கருநாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தனர். பிடித்த நாள் முதல் அம்மாநில மக்களைக் கிரகணம் பிடித்துக் கொண்டு விட்டது.

குஜராத்துக்கு அடுத்த படியாக கருநாடக மாநிலத்தை இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக ஆக்க விருப்பதாகக் கூறியதை இப்பொழுது அன்றாடம் மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தாவளர் கரே, உடுப்பி, மங்களூரு, சிக்மகளூரு, ஷிமோகா, திப்தூல், கோலார், கிக்பலாபூர், கொடகு, பெங்களூரு ஆகிய இடங்களில் 55 கிறித்துவ ஆலயங்கள் நொறுக்கப்பட்டன.

கிறிஸ்துவ ஆலயங்களுக்கு வழிபட வந்தவர்கள் சங்பரிவார்க் கும்பலால் தாக்கப்பட்டனர் - காவல்துறையும் அவர்களோடு சேர்ந்துத் தாக்கிய கொடுமைகளும் அரங்கேறின.

ஸ்ரீராம சேனா என்ற ஓர் அமைப்பு. அதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் - இவர்மீது உள்ளவை கொலை வழக்குகள் உள்பட! வெளிப்படையாகவே கூறித் திரிகிறார்: 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் எங்கு வேண்டுமானாலும் மதக் கலவரத்தை உண்டாக்கத் தயார் என்கிறார் - எந்தவிதச் கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாகத் திரிந்து கொண்டு இருக்கிறார்.

மதவாதம் இப்படி துள்ளித் தாண்டவமாடுகிறது என்றால், லஞ்ச லாவண்ய ஊழல்களில் கின்னசில் இடம் பிடிக்க நிர்வாணமாகத் தாவிக் கொண்டு நிற்கிறது.

நில மோசடி வழக்கு ஊர் சிரிக்கிறது - சுரங்கத் தொழில் மாமன்னர்கள் ரெட்டி சகோதரர்கள் இருவர் மாநில அமைச்சரவையில் இருந்து கொண்டு முதல் அமைச்சர் எடியூரப்பாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டுள்ளனர். தொடக்கத்தில் அவர்களை எதிர்த்துப் பார்த்த எடியூரப்பா கடைசியில் சரணாகதி அடைந்துவிட்டார்.

பெங்களூரு - மைசூருக்கு இடையில் அதி விரைவு தனிச் சாலை அமைக்கும் திட்டம் ரூ.2500 கோடி செலவில் உருவாக வேண்டும்.

நிலத்தைக் கையகப்படுத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கருநாடக பா.ஜ.க ஆட்சி காட்டி வரும் அலட்சியத்தைப் பற்றி உச்சநீதிமன்றம் இதுவரையிலும் யாருக்கும் வழங்காத சான்றிதழை வழங்கியுள்ளது. கருநாடக அரசு கோமா நிலையில் உள்ளது என்பதுதான் அந்த மகத்தான பட்டம்.

இது ஒரு பக்கம் என்றால், முதல் அமைச்சர் எடியூரப்பா போடும் கோமாளிக் கூத்து, நாகரிகம் உள்ள மக்களால் எள்ளி நகையாடப்படுகிறது. அவரது ஆட்சியைக் கவிழ்க்க அவரின் அரசியல் எதிரிகள் பில்லி, சூன்யம் வைத்து விட்டார்களாம்.

அதற்காக அவர் என்ன செய்தாராம்? நிர்வாணமாகப் படுத்துக் கொண்டாராம். கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் இவற்றையும் விளம்பரப்படுத்து கிறார்களே - என் செய்ய!

பிஜேபி என்றாலே இந்து மத மூடநம்பிக்கையின் உல்லாச பூங்காதானே! எடியூரப்பா போன்றவர்கள் அதற்கு மிகவும் பொருத்தமான கதாநாயகர்தான்.

இந்தக் கூத்துகள் ஒருபுறம் இருக்க, கட்சிக்குள் உள் குத்துகள்; எடியூரப்பாவை எதிர்த்து கட்சிக்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி!

ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்ட நிலையில் சட்டப் பேரவையின் தலைவரைக் கையில்போட்டுக் கொண்டு சம்பந்தப்பட்ட 11 பேர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்தார். உயர்நீதிமன்றத்தில் அதற்குச் சாதகமாக தீர்ப்பும் பெறப்பட்டது.

இப்பொழுது உச்சநீதிமன்றமோ அந்தத் தீர்ப்பு தவறு என்று சொல்லிவிட்டது. ஆளுநர் என்ன செய்தார்? பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை - சட்டமன்றத்தை முடக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்குப் பரிந்துரை செய்தார்.

இதற்கிடையே எடியூரப்பாவை எதிர்த்துப் போர்க் கொடியைத் தூக்கிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் எடியூரப்பாவுக்குத் திடீரென்று ஆதரவு தெரிவித்து விட்டார்களாம். இடையில் நடந்த குதிரைப் பேரம் யாருக்கு வெளிச்சமோ!

குடியரசு தலைவர் மாளிகைக்குச் சென்று தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று கூறி அணி வகுப்பு நடத்தப்பட்டதால் இதற்குப் போக்குவரத்துச் செலவு மட்டும் பல லட்சம் ரூபாயாம்.

கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த முதற்கொண்டே குழப்பம்! குழப்பம்!! படு குழப்பமே!!!
மரியாதையாக அவர்களே சட்டசபையைக் கலைக்க பரிந்துரை செய்துவிட்டு, புதிதாகத் தேர்தல் நடத்தச்  சொல்லலாம் - அப்பொழுதுதான் அம்மாநில மக்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக