புதன், 22 ஜூன், 2011

வேண்டாம் சில்லறைத் தனமான வேலை!


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பல்பொருள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதானது - வெகு மக்கள் விரோத நடவடிக்கை என்பதெல்லாம் வேறு எதுவும் இல்லை.

பொருளாதார ஆலோசகர்கள் என்றால் பெரும்பான்மை ஏழை, எளிய, நடுத்தர மக்களைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் என்று பொருளா?

ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்குவதும், பணக்காரர் களை மேலும் மேலும் பணக்காரர்கள் ஆக்குவதும்தான் பொருளாதாரப் புலிகளின் சாதனைகளா?

வறுமைக்கோட்டுக்கும் கீழ் கிடந்து புரளும் பெரும் பான்மையான மக்களை கை தூக்கி விடும் திட்டம்தானே மக்கள் நல அரசு என்பதற்கான அடையாளம்!

நாட்டின் மொத்த சொத்தில் நான்கில் ஒரு பாகம் 48 கோடீஸ்வரர்களிடமும் 80 கோடி மக்களின் நாள் வருமானம் ரூ.20 என்ற நிலையும்தானே இந்தியா!

தனியார்த் துறைகளைப் பொதுத் துறைக்குக் கொண்டுவந்த சோசலிசம் ஒரு கால கட்டத்தில் இந்தியாவில் கொடி கட்டிப் பறந்தது. இப்பொழுது அதற்கு நேர் எதிராக அரசுத் துறைகளைத் தனியார்க்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கத் துடிக்கும் பூர்ஷ்வா சோசலிசம்தான் அன்ன நடை போடுகிறது.

சில்லறை வியாபாரங்களிலும் அந்நிய முதலீடு என்று வந்துவிட்டால் சிறு சிறு தொழில்கள் மூலம் வயிற்றைக் கழுவும் மக்களின் நிலை என்னாவது!

உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற திரிசூலங்கள் பல தொழிற்சாலைகளை இழுத்து மூடச் செய்தன. அவற்றில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்த் தோழர்கள் வீதிக்கு வந்ததுதான் புதிய பொருளாதாரக் கொள்கையின் மகத்தான சாதனையாகும்.

மென் பானங்கள் பெயரால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் புகுந்து ஏற்கெனவே உள்ளூரில் இடம் பிடித்திருந்த காளி மார்க் போன்ற சோடா கம்பெனிகளை இழுத்து மூடும்படிச் செய்து விட்டன.

அக்வாஃபனா,  கின்லீ, ஈவியான், எஸ். கங்கா, அக்வாப்யூர், சாபோல்ஸ் இவையெல்லாம் இந்தியாவுக்குள் புகுந்து போத்தங்களில் குடி தண்ணீரை விற்றுக் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த குபேரர்கள்.

ஒரு லிட்டர் பாலைவிட ஒரு லிட்டர் தண்ணீர் விலை அதிகம் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டனர்.
போத்தல் தண்ணீர் தான் தூய்மையான குடிநீர் என்கிற மாயைக்குள் மக்களை வீழுமாறுஞ் செய்து விட்டனர் வண்ண வண்ண விளம்பர முறைகளால்.

இந்தக் குடிநீரானது கிருமிகள் அற்றவையா என்றால் அதுதான் இல்லை (நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது!)

விஞ்ஞானம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் மய்யம்  என்ற நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களின் குடிநீரை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. 21 நிறுவனங்களின் குடிநீரில் 32 வகையான நஞ்சுகளும், கிருமிகளும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. வயலுக்குப் பூச்சி மருந்துக்குப் பதிலாக இந்தப் போத்தல் தண்ணீரைப் பயன்படுத்தினால் பயன் அதிகம் என்று கூடக் கூறப்பட்டதுண்டு.

இந்தியாவிலேயே இதில் விழிப்படைந்த மாநிலமாகக் கேரளா மட்டுமே இருந்தது. ஒழுங்காகப் படித்த மக்கள் அவர்கள் போலும்!

பன்னாட்டு நிறுவனங்கள் குடிநீரை இங்கே நுழைத்தால் எங்கள் இளநீர் வியாபாரம் படுத்து விடும் என்று குரல் கொடுத்தார்கள்.  தென்னை மரம் வளர்ப் போர் சங்கமும், மரமேறுவோர் சங்கமும் இணைந்து கடும் போராட்டத்தை நடத்தி இந்தப் பன்னாட்டு நிறுவனங் களை விரட்டியடித்தன.
வட்டிக் கடைக்காரர்களையும்கூட ஒரு கட்டத்தில் கேரள மக்கள் விரட்டியடித்தனர். அந்த நிலை இந்தியாவெங்கும் உருவானால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் கடைவிரிக்க முடியாது.

ஏழை விவசாயி தோட்டத்தில் பயிர் செய்யும் காய்கறிகளை நல்ல விலைக்கு விற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடும் -  சில்லறை வியாபாரத்தில் அந்நியர்கள் புகுந்தால்.

பகட்டான முகமூடியுடன்   ஒன்றுக்குப் பல மடங்காக விற்பதுதான் அயல் முதலாளிகளின் தொழில் நுட்பமாகும்.

ஏற்கெனவே இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், சில்லறை விற்பனை என்னும் கூடாரத்தில் அந்நிய ஒட்டகங்களை நுழைய விட்டால் கூடாரம் இனி ஒட்டகத்திற்குத்தான். ஏழை, எளிய,  நடுத்தர மக்களின் வாழ்வோடு மத்திய அரசு விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் - எச்சரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக