புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சில வழக்குகள் வேக வேகமாக நாள்தோறும் விசாரணைகள் நடக்கின்றன - இது வரவேற்கத்தக்கதுதான்.
ஆனால், வேறு சில வழக்குகள் நாட்டு நலன் கருதி விரைந்து முடித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டியவை ஊறுகாய் ஜாடியில் கிடக்கின்றனவே - அது எப்படி?
குறிப்பாக 1992 டிசம்பர் 6 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு.
இந்தியக் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகளின்கீழ் உள்ள வழக்குகள் அவை.
மக்களிடையே மத, இன, மொழி, குரோத உணர்வைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல், மக்களிடையே பீதியை ஏற்படுத்துதல் என்பது போன்ற மகாக் குற்றங்கள்.
இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களோ பெரிய மனிதர்கள் என்று கருதப்பட்டவர்கள்;  உண்மை யிலேயே நாட்டுக்கு வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் மிகத் தவறான குற்றங்களில் ஈடுபட்ட காரணத் திற்காகவே இந்த வழக்குகளின் மீதான விசாரணை வெகு வேகமாக நடத்தப்பட்டு தண்டனையும் மிகக் கடுமையாக அளிக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், நடப்போ தலைகீழாக அல்லவா இருக்கிறது!
இவ்வளவுப் பெரிய குற்றங்களைச் செய்தவர்களே தண்டிக்கப்படவில்லை - நாம் ஏன் குற்றங்களைச் செய்யக்கூடாது என்ற எண்ணம் இயல்பாகவே மக்கள் மத்தியில் ஏற்படாதா?
மக்களுக்கே இந்த வழக்குப்பற்றிய எண்ணம் அறவே மறந்துவிடும் போல் தோன்றுகிறது. பெரிய தலைவர்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்றவே இப்படியெல்லாம் நடக்கிறது என்ற எண்ணங்கூட பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையைப் போக்கவேண்டியது நீதித்துறையின் முக்கியமான கடமையாகும்.
மற்ற மற்ற வழக்குகளில் அரசு வழக்கறிஞர்களை நீதிபதிகள் விரட்டுகிறார்கள் அல்லவா - எல்லா வகை யிலும் மிக முக்கியமான இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்த வேண்டியது நீதித்துறையின் முதன்மை யான கடமையாயிற்றே!
இந்த வழக்கில் உண்மையான தீர்ப்பு வரும் பட்சத்தில் பல தலைவர்கள் தேர்தலிலேயே இனி போட்டியிட முடியாத நிலைக்குக்கூடத் தள்ளப்படலாம்.
இதில் என்ன வேடிக்கை என்றால், பாபர் மசூதி இடிப்புக் காரணமாக மும்பையில் ஏற்பட்ட கலவரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விட்டனர். மூல வழக்கோ அப்படியே கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே கிடக்கிறது.
அதுபோலவே மும்பைக் கலவர வழக்குச் சம்பந்தப்பட்ட சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே மீதான வழக்கு என்னாயிற்று என்ற கேள்வியும் எழுகிறது.
இன்னொரு முக்கிய வழக்கு- காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு; இதில் முக்கிய இரு குற்றவாளிகள் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் - சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாக மாறும் - மாற்றப்படும் நிலை.
நீதிமன்றத்திற்கே வராமல் சங்கராச்சாரியார்கள் அடம் பிடித்து வாய்தா குதிரைமேல் சவாரி செய்து கொண்டு திரிகிறார்கள்.
இவையெல்லாம் நத்தைகளாக ஊர்ந்துகொண்டு இருக்கின்றன. உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் ஆரம்பித்து மற்ற மற்ற வழக்குகளின் விசாரணை களைத் துரிதப்படுத்த சாட்டையை எடுத்துக்கொண்டு விரட்டவேண்டும்.
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பாகவே கருதப்படும் என்று வார்த்தையழகுக்காகச் சொல் வதோடு நின்றுவிடக்கூடாது - செயலில் காட்ட வேண்டும் - அப்பொழுதுதான் சட்டம், நீதியின்மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.


.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக