புதன், 22 ஜூன், 2011

காவிப் போதை கண்களை மறைக்கிறது


ஊழலை ஒழிப்போம் லஞ்சத்தை வேரறுப்போம் என்று சொல்லுவதெல்லாம் ஏதோ ஒரு நாகரிகமாக (Fashion) போய்விட்டது என்று சொல்லும் அளவுக்கு அவை மலிவாகி விட்டன.
தாங்களே லஞ்சவாதிகளாகவும், ஊழல்வாதி களாகவும் இருந்து கொண்டு ஊழலை ஒழிக்க முன் வருவதாகவும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்ததுதான் - இந்தப் பிரச் சினையை இந்த அளவு மலிவுப் பொருளாக்கி விட்டன.
அதுவும் இந்த ஊழல் ஒழிப்பு உத்தமர்களின் திரை மறைவில், ஊழலின் பிறப்பிடமான இந்துத்துவா வாதிகள் முக்காடு போட்டு உட்கார்ந்து இருந்தது தான் - இவர்களின் ஊழல் ஒழிப்பு என்ற முழக்கம் போலியானது - உள்நோக்கம் கொண்டது என்று பொது மக்கள் கருதும் நிலைக்குக் காரணமாகும்.
பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில், குறிப்பாக கருநாடக மாநிலத்தில் கொடி கட்டிப் பறக்கும் லஞ்ச லாவண்யம் குறித்து குறைந்தபட்சம் கண்டனம்  -விமர்சனம்கூட செய்யாதது - ஏன் என்ற கேள்வி எழவில்லையா?
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து வெளியில் வெட்கமின்றி உலா வருகிறார்களே - இந்த உத்தமர்கள் இதுபற்றியெல்லாம் கருத்துத் தெரிவித்தது உண்டா?
அடுத்து இரு ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது என்றவுடன் அதற்கு முன்கூட்டியே இப்படி ஓர் ஒத்திகையை நடத்துகிறார்கள் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.
பாபா ராம்தேவ் என்பவர் ஆர்.எஸ்.எஸ். அமைப் போடு நெருக்கமான தொடர்புடையவராக உள்ளவர் என்ற குற்றச்சாற்று இதுவரை மறுக்கப்படவில்லையே!
இந்த யோகா சாமியார் ராம்தேவ் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறுவது - ஓர் அரசியல் சதி என்று டில்லி இமாம் சையத் அஹ்மது புஹாரி கூறுகிறார்.
இந்தியாவில் ஊழலைவிட மதவாதம்தான் மாபெரும் பிரச்சினை என்று கூறிய இமாம், ஊழல் நாட்டுக்குள்ளே வெறியாட்டம் ஆடும் ஒரு பிரச்சினை என்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் மதவாதம் நாட்டையே அச்சுறுத்தும் தீமை என்றும் குறிப்பிடுகிறார்.
ராம்தேவின் இந்தச் சதியில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய சக்திகளுக்கு சம அளவில் பங்கு உண்டு என்று கூறும் டில்லி இமாம். மத்திய காங்கிரஸ் அரசு, ராம்தேவை தாஜா செய்வது வியப்பை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஊழல் ஒழிப்பு உத்தமர்களின் நடவடிக்கை கள் பிரச்சினையை வேறு பக்கம் இழுத்துச் சென்றுள்ளன என்பதையே இது காட்டுகிறது.
டில்லி இமாம் சொல்லும் கூற்றில் ஓர் உண்மை ஆழமாக உள்ளது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. ஊழலைவிட மதவாதம் ஆபத்து என்கிற போது அந்த மதவாதத்தின் ஊக்க சக்தியாக இருக்கக் கூடியவர்கள் ஊழல் ஒழிப்பு நாடகம் ஆடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால், இவர்கள் எப்படிப்பட்ட ஆபத்தானவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாமே.
ஆனால் கல்கி போன்ற பார்ப்பன ஊடகங்கள் எவ்வளவு சாமர்த்தியமாகத் திசை திருப்புகின்றன! இவ்வார கேள்வி - பதில் பகுதியில் (26.6.2011) என்ன எழுதுகிறது கல்கி?
கேள்வி: யோகா குரு பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தூண்டுதல் உள்ளது என உள்துறை அமைச்சர் சிதம்பரம் புகார் கூறியுள்ளாரே?
கல்கியின் பதில்: இலக்கைக் குறைகூட முடியாததால் கையாளப்படும் வழிமுறையில் குற்றம் கண்டுபிடிக்க முயலுகிறார். பிரச்சினையை எதிர் கொள்ளும் துணிவு இல்லாமல்  அரசியல் சாயம் பூசி, திசை திருப்புவதில் என்ன பயன்? லஞ்ச ஊழலை ஒழிக்க மத்திய அரசே நேர்மையான வழிமுறைகளை வகுத்தால், அதில் உறுதியாக இருந்தால் மக்களின் நெஞ்சக் குமுறல்களைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமே ஹசாரே அல்லது ராம்தேவுக்கு இராதே என்று கல்கி எவ்வளவு சாமர்த்தியமாக இந்த ஆர்.எஸ்.எஸ். பின்புலப் பேர்வழிகளைக் காப் பாற்றுகிறது?
இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஒரு கருத்தைக் கூறுகிறார் என்றால், பல தகவல்களை துல்லியமாகத் தெரிந்துவைத்துள்ள நிலையில் உள்ள ஒருவர் ஒரு கருத்தினைத் தெரிவிக்கிறார் என்றால், அதற்குரிய முக்கியத்துவத்தைக்கூட கல்கிகள் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் காவிப் போதை கண்களை மறைக்கிறது என்பது தானே உண்மை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக