புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
அயோத்தியில் 500 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ஆம் தேதி பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் கும்பலால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. அந்தக் கேடு கெட்ட காரியத்தைச் செய்த குற்றவாளிகள் மீது இதுவரை எந்தவிதமான சட்ட ரீதியான நடவடிக் கைகளும் கிடையாது.

2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு விசாரணை நாள்தோறும்  நடைபெற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கும் உச்சநீதிமன்றம் - அதைவிட முக்கியத்துவம் வாய்ந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின்மீது அலட்சியம் காட்டுவது புரியாத புதிர்தான்!

பாபர் மசூதி தொடர்பான வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை நீதிமன்றத்தைச் சேர்ந்த மூன்று நீதிபதிகள் விசித்திரமான தீர்ப்பு ஒன்றினை 2010 செப்டம்பர் 13ஆம் தேதி அளித்தனர்.

அகில பாரத இந்து மகாசபை, நிர்மோகி அகாரா, உத்தரப்பிரதேசம் சென்ட்ரல் வக்ஃப்போர்டு ஆகிய மூன்று மனுதாரர்களுக்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலப் பகுதியில் (2.77 ஏக்கர்) பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதே உ.பி. லக்னோ உயர்நீதிமன்றக் கிளை அளித்த தீர்ப்பாகும்.

இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்தே - இது குறித்துப் பெரும் சர்ச்சைகள் பீறிட்டுக் கிளம்பின.

குறிப்பிட்ட நிலம் யாருக்குச் சொந்தம் என்று கறாராகத் தீர்ப்பு சொல்ல வேண்டுமே தவிர, கட்டப் பஞ்சாயத்து முறையிலும் ஓர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லலாமா என்று பல தரப்பினரும் - வினாக் கணையை எழுப்பினார்கள்.

தினமணி ஏடேகூட இந்தத் தீர்ப்பை விமர்சித்து எழுதியது என்றால் அதன் தன்மையைத் தெரிந்து கொள்ளலாமே!

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்ரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டு வரி உள்பட அந்த இடத்துக்கான எல்லாப் பங்களிப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை எழுகிறது.

அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து கொள்ள கட்டப் பஞ்சாயத்தில் முடிகிறது.

கட்டப் பஞ்சாயத்துக்கு இதுசரி. ஆனால் நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுத முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்சினையில் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும்? இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதுபோல இருக்கிறது என்று தினமணி தலையங்கம் தீட்டியது என்றால், லக்னோ தீர்ப்பின் தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாமே!

தினமணி கூறியது போலவே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு லக்னோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குத் தடையும் வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம். லோதா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் - லக்னோ நீதி மன்றக் கிளை வினோதமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அந்த இடத்தைப் பங்கீட்டு அளிக்க வேண்டும் என்று யாரும் கோரவில்லை; இந்த நிலையில் அதை எப்படிப் பங்கிட்டு வழங்க உத்தரவிட முடியும்?

நீதிமன்றம் தனது சொந்த கருத்தை நிலை நாட்டியுள்ளது. எனவே லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

1949 டிசம்பர் 22/23 ஆம் நாள்களில் காலித்தனமாக பாபர் மசூதி வளாகத்துக்குள் ராமன் உள்ளிட்ட சில சிலைகளை அத்துமீறி வைத்த நேரத்திலேயே, அன்றைய அரசு சட்டப்படி நடந்திருந்தால், திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அகற்றியும், சிலைகளை வைத்தவர்களைக் கைது செய்தும் உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இவ்வளவு திருக் கூத்துகளும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

என்ன செய்வது, தந்தை பெரியார் கணித்தது போலவே இந்தியாவில் பிராமினோகிரசி (Brahminocracy) தலை தூக்கி ஆடுவதால் எல்லா வகையான ஒழுங்கு மீறல்களும் சட்ட ரீதியாக நடந்துகொண்டு இருக் கின்றன.

திராவிடர் கழகம் போன்று மாநிலத்திற்கு ஒரு சமூகப் புரட்சி இயக்கம் இருக்குமேயானால் இதுபோன்ற சட்ட மீறல்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டு, நியாயங்கள் நிலை நாட்டப்பட்டிருக்கும்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் பற்றிய சர்ச்சையின் மூடு திரையில் பாபர் மசூதியை இடித்த கொள்ளையர்கள் ராஜநடை போட்டுத் திரிகிறார்களே -  அவர்கள் சிறைக் கோட்டத்தில் அடைக்கப்படுவது எப்பொழுது? நீதிமன்றங்களும் இதுபற்றிக் கவலைப்படுவதில்லையே - ஏன்? விடை கிடைக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக