புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் ஏழு மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் கூட்டம் புதுடில்லியில் பா.ஜ.க., முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றுள்ளது (10.5.2011)

இந்தக் கூட்டத்தில் பேசியவர்களின் கருத்துகள் கருத்தூன்றிப் பார்க்கத் தகுந்தவையாகும்.
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி இரண்டு விதமான வழியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து கட்சியின் மேல் மட்டத்திலிருந்து அடி மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு,  அவர்களது கருத்துகளும் ஆலோசனைகளும் கேட்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

இதன் பொருள் அரசின் திட்டங்கள் பாரதிய ஜனதாவின் ஆலோசனைகளின்படி வரையறுக்கப் படுகின்றன என்பதாகும். பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார்களின் ஆலோசனைகள், கருத்துகள் எவற்றை மய்யப்படுத்தி வெளிவரும் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படப் போவதில்லை.

குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதுகூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் என்று வந்தபோது, அந்தப் பொறுப்புகள் ஆர்.எஸ்.எஸிடம்தான் ஒப்படைக்கப்பட்டன. அதில்கூட மதம் பார்த்து, ஜாதி பார்த்து பாரபட்சமாக ஆர்.எஸ். எஸினர் நடந்து கொண்டனர் என்ற புகார் கிளம்பிய துண்டு.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் - அரசின் துணையோடு, பா.ஜ.க., மற்றும் சங்பரிவார்க் கும்பலின் கைகளில்தானே ஒப்படைக்கப்பட்டன.

இரண்டு நாள்கள் அவகாசம் தரப்படும்; அதற்குள் சிறுபான்மையினர்களை அழிக்கும்  வேலைகள் முற்றுப் பெற்றிட வேண்டும்; காவல்துறையினர் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று முதல் அமைச்சர் எங்களுக்கு வாய் வழி உத்தரவிட்டார் என்று பா.ஜ.க.வினர் கூறவில்லையா?

பா.ஜ.க. மாநிலத்தில் நடைபெறுவது கட்சி சார்ந்த ஆட்சியே தவிர, பொது மக்கள் சார்ந்த நல்லாட்சி அல்ல என்பது குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் கூற்றிலிருந்து பெறப்படவில்லையா?

இக்கூட்டத்தில் பேசிய அகில இந்திய பா.ஜ.க.வின் தலைவர் நிதின் கட்காரி -

மத்தியப்பிரதேசத்தில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மற்ற மாநில முதல்வர்கள் பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் இந்துத்துவா கொள்கைகள் மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று பேசியிருக்கிறார்.

இதே பா.ஜ.க. தலைவர் நிதின்கட்காரிதான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பா.ஜ.க.வின் செயல் திட்டம் அல்ல என்று பேசியவர். ஒரு வார கால இடைவெளியில், ராமன் கோயில் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்துப் பேசி இருக்கிறார்.

வெளிப்படையாகச் செய்தியாளர்களிடம் பேசுவது ஒன்று - கட்சி மட்டத்துக்குள், ஆட்சி மட்டத்துக்குள் பேசுவது இன்னொரு நாக்கு - இதற்குப் பெயர்தான் பா.ஜ.க. என்பது. மத்திய பிரதேச பா.ஜ.க. ஆட்சியை பா.ஜ.க. ஆளும் மற்ற மாநில முதல் அமைச்சர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கட்காரி கூறியிருக்கிறார்.

அது என்ன மத்தியப்பிரதேச பா.ஜ.க. ஆட்சி? அங்கு பின்பற்றப்படுபவை எவை என்பது குறித்துத் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக இருக்கலாம்; ஆர்.எஸ்.எஸில் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று அங்கு சொல்லப்பட்டதே - அந்த முறையை மற்ற பா.ஜ.க. முதல் அமைச்சர் பின்பற்ற வேண்டும் என்று கூற வருகிறாரா?

டில்லியில் நடைபெற்ற பி.ஜே.பி. முதல் அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? பேசப்பட்ட கருத்துகள் என்னென்ன? திட்டங்கள் எவை எவை என்பது அறியப்பட வேண்டியவையாகும்.

மற்ற மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றதல்ல பா.ஜ.க., அதற்கென்று ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரல் (அஜண்டா) உண்டு; அது சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாகவும், மதச் சார்பற்ற தன்மையின் ஆணி வேரை வெட்டுவதாகவுமே இருக்கும். எனவே அவை அணுக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டியவை.

மத்திய அரசின் புலனாய்வுத் துறைக்கு - மற்ற மற்ற மாநிலங்களைவிட பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் வேலையும், கவனமும் அதிகம் தேவைப்படும்.

குறிப்பாக பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் பாடத் திட்டங்கள் எந்த வகையில் இருக்கின்றன - ஷாகா பயிற்சிகளின் தன்மைகள் என்னென்ன என்பனவெல்லாம் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவ்வப்பொழுது அவற்றின் மீதான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் நாட்டின் அமைதி வாழ்வுக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் பேராபத்தாக முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக, பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் 19 ஆண்டு காலமாக அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்காமல் ராஜ நடை போட்டுத் திரிகிறார்கள். அது தொடர்பான வேறு வழக்குகளில் எல்லாம் தீர்ப்புகள் வந்துவிட்ட நிலையில், மூல வழக்கு இன்னும் முடிவு காணாமல் இருப்பது குற்றவாளிகளுக்குப் பெரும் உற்சாகமாக இருக்கிறது.

மிக அவசரமாக இதன்மீது நடவடிக்கை தேவை! தேவை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக