புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தருமபுரி மாவட்டத்திலிருந்து 11 கி.மீட்டர் தூரத்தில் ஒரு கிராமம் மிட்டாரெட்டி அள்ளி என்பது. 95 தாழ்த்தப்பட்டவர் குடும்பங்களாம்; அதில் 25 குடும்பங்கள் திருநீறு அணிபவர்களாம். 70 குடும்பங்கள் நாமம் அணிபவர்களாம்.

இந்த இரு பிரிவினருக்கும் பொதுவான ஒரு கோயில் ஓம் சக்தி காளியம்மன் கோயில்.

குடும்பம் ஒன்றுக்கு ரூ.650 வரி போட்டனராம் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருக்கும் நாமதாரிகள்.

கோயிலில் எங்களுக்கு எந்தவித மரியாதையும் இல்லை. இந்த நிலையில் நாங்கள் வரி கொடுக்க மாட்டோம் என்று திருநீறு பூசும் பிரிவினர் கூறிவிட்டனராம். கோயில் திருவிழாவில் பங்கேற்க மாட்டோம் என்று கூறிவிட்டனராம்.

வாக்குவாதம் முற்றவே பிரச்சினை அதியமான் பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்றது. ஒரு ஜாதிக்குள் ஏன் இப்படி மோதல்; ஒற்றுமையாகப் போகுமாறு காவல் நிலைய அதிகாரிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

திருநீறு பூசிய பிரிவினர் வரியையும் கொடுத்து விட்டனர். சுமுகமாகப் போக வேண்டியதுதானே? திருவிழா கடைசி நாளன்று பிரச்சினை வெடித்து விட்டது. நாமம் பெரிசா? திருநீறு பெரிசா? யார் உசத்தி என்பதுதான் பிரச்சினைக்குக் காரணமாம். வாக்குவாதம் முற்றி அடிதடி ஆரம்பமானது.

25 திருநீறு பூசிய பிரிவினர்களின் வீடுகளைப் புகுந்து தாக்கினார்கள். பலருக்குக் காயங்கள். பொருள்கள் இழப்பு. 14 பேர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் எல்லாம் தலைமறைவாகி விட்டனராம்.

நாம் 2011ஆம் ஆண்டில்தான் வாழ்கிறோமா? மதமும் - சடங்குகளும் மனிதர்களை மிருகங்களாக்கி விட்டன என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

அதுவும் இந்து மதத்தின் நான்கு வருணங் களுக்குள்கூட சேர்க்கப்படாமல் அவர்ணஸ்தர்களாக ஆக்கப்பட்டவர்களாயிற்றே நாம்!

இந்த நிலையில் நம்மை அவமானப்படுத்தும் மதத்தில் நுகத்தடியில் சிக்கிக் கொண்டு நமக்குள் நாமே மோதிக் கொள்ள வேண்டுமா? நமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தாதது என்ன சாமி?

கோயில் குளங்களும், திருவிழாக்களும் இருப்ப தெல்லாம் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு சாகத்தானா?

திருநீறு - நாமம்.. என்பதெல்லாம் எந்த கலாச்சாரம்? நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

நாம் இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம் - இந்தக் கேடு கெட்ட நிலையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத்தானே  தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அயராது பாடுபட்டார்கள்?

இந்தப் பாழாய்ப் போன இந்து மதச் சனியன் வேண்டவே வேண்டாம் என்று அண்ணல் அம்பேத்கர் பல லட்சம் தாழ்த்தப்பட்ட  மக்களுடன் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு பவுத்தம் தழுவினார். இதை எல்லாம் அவ்வூரில் உள்ள படித்த இளைஞர்கள் நம் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டாமா?

ஜாதியை நமக்குள் உருவாக்கிக் கொடுத்து விட்டு, நாம் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு நம்முடைய ரத்தம் ஆறாக ஓடுவதைத் தூர இருந்து வேடிக்கைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறது ஆரியம் என்ற நரிக் கும்பல்.

இந்தப் பிரச்சினையில் அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட மாட்டார்கள்தான்; ஆனாலும் இதன் சூட்சம மய்யம் அவர்களின் கைலகானில் தான் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

பார்ப்பனர்களிடையேகூட வடகலை நாமம், தென் கலை நாமச் சண்டை இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அவர்கள் வெட்டிக் குத்திக் கொண்டா சாகிறார்கள்?

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும், ஜாதி ஒழிப்புக் கருத்துகளையும் முடுக்கிவிட வேண்டும். அப் பகுதியில் உள்ள இளைஞர்கள் மத்தியிலே விழிப் புணர்வை ஏற்படுத்திவிட வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்களாக!

ஜாதி ஒழிப்புதான் நமது முக்கிய லட்சியம் - ஜாதிக்குப் பாதுகாப்பாக இருக்கும் அத்தனை சக்திகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்து வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக