புதன், 22 ஜூன், 2011

சமச்சீர் திடத்தை ஒழிக்க ஒரு குழுவா?


தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப்பட்டது என்ற நிலை வரும்போல் தோன்றுகிறது.

சமச்சீர் கல்வியை உருவாக்கும் குழுவில் ஓர் உறுப்பின ராக இருந்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் இதுபற்றிக் கூறுகிறார்:

கல்விபற்றிய முடிவுகளில் பயிற்றுமொழி போன்ற சில மட்டுமே அரசியல் சார்ந்தவை. மற்றவை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எடுக்க வேண்டியவை. பாடத் திட்டம் கல்வியாளர்களது பொறுப்பு. சமச்சீர் கல்விக் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக நான் இருந்துள்ளதால் இன்று எழுந்துள்ள சில பிரச்சினைகளை விளக்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு வாரியங்களைச் சார்ந்த மூத்த ஆசிரியர்களைக் கொண்ட உட் குழுக்கள் அமைக்கப் பட்டு, நான்கு வாரியப் பாடத் திட்டங்களை ஒப்பிடுமாறும், பொதுப் பாடத் திட்டம் வகுக்க வழிமுறைகளை கூறவும் அவை கேட்டுக் கொள்ளப்பட்டன.

அந்த உட் குழுக்களின் அறிக்கைப்படி பாடத் திட்டங்களிடையே பெருத்த வேறுபாடுகள் ஏதுமில்லை என்றும், ஒரு சிலவற்றில் மாநில வாரியப் பாடத் திட்டங்கள் கல்வியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப தயாரிக்கப் பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாடத் திட்டங் கள் தரமற்றவை என்ற குற்றச்சாற்று தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளினால் கூறப்படுகிறது. நன்முறையில் தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்விப் பாடத் திட்டங்களை முடக்குவது சரியான முடிவல்ல என்று கூறியுள்ளார்.

(புதிய தலைமுறை கல்வி 6.6.2011)

சமச்சீர் கல்வித் திட்டத்துக்குத் தலைமை வகித்த பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் முத்துக்குமரன் அவர்களோ, எஸ்.எஸ். ராஜகோபாலன் போன்றவர்களோ அரசியல்வாதிகள் அல்லர் - கல்வி யாளர்களே!

உண்மை இவ்வாறு இருக்க, அரசியல் கண்ணோட்டத் தோடு இந்தக் கல்விச் சமத்துவத் திட்டத்திற்கு மூடு விழா செய்யும் போக்கில் அ.இ.அ.தி.மு.க. அரசு நடந்து கொண்டு வருவது பிற்காலத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

உச்சநீதிமன்ற ஆணைப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய முதல் அமைச்சர் அவர்களால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட குழு உறுப்பினர்களைப் பார்க்கும் பொழுது சமச்சீர் கல்வித் திட்டம் கூடவே கூடாது என்ற மனப்பான்மை உள்ளவர்களாகத் தேடிப்பிடித்து நியமனம் செய்ததுபோலவே தோன்றுகிறது.

பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே அவர்கள் இருப்பது அதிர்ச்சிக்கு உரியதாகும்.

மாநிலப் பிரதிநிதிகள் இருவர்

(1) ஜி. பாலசுப்பிரமணியன் (முன்னாள் இயக்குநர்

(கல்வி) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பார்ப்பனர்

(2) திருமதி விஜயலட்சுமி சீனிவாசன்- பார்ப்பனர். (முன்னாள் முதல்வர் லேடி ஆண்டாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி, சென்னை மற்றும் சேவா சதன் (உதவி பெறும் பள்ளி) தாம்பரம்) இரு கல்வியாளர்கள் 1. சி. ஜெயதேவ் (நிறுவனர் மற்றும் செயலாளர் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம் கோபாலபுரம், சென்னை) - வடநாட்டுப் பார்ப்பனர், டாக்டர் திருமதி ஓய்.ஜி. பார்த்தசாரதி - பார்ப்பனர் (இயக்குநர் பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளிகள் குழுமம் சென்னை)  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT)
இரு பிரதிநிதிகள்

(1) பேராசிரியர் பி.கே. திரிபாதி - பார்ப்பனர்

(2) பேராசிரியர் அனில்சேத்தி  - பஞ்சாபி

குழுவுக்குத் தலைமை வகிப்பவர் (தமிழக அரசின் தலைமைச் செயலாளர்) தேபேந்திரநாத் சாரங்கி - பார்ப்பனர் மற்றும் இருவர் பள்ளி கல்வி அரசு செயலாளர் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்.

அரசுத் துறை அதிகாரிகளைத் தவிர்த்து மற்ற உறுப்பினர்கள் 6 பேர்களில் 5 பேர் பார்ப்பனர்கள் ஆவார்கள். குழுத் தலைவரும் பார்ப்பனரே!

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக அல்லவா இது இருக்கிறது!

கல்வியாளர்கள் இருவர் என்று சொல்லப்படுபவர்கள்கூட கல்வி நிறுவனங்களின் முதலாளிகளே தவிர, நிர்வாகிகளே தவிர கல்வியாளர்கள் அல்லர்.

அதுவும் மெட்ரிக், சி.பி.எஸ்.ஈ. கல்விக் கூடங்களை நடத்திக் கொண்டு இருப்பவர்கள். இவர்கள் சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களே!

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) பிரதிநிதிகள் இருவரில் ஒருவர் பார்ப்பனர் இன்னொருவர் பஞ்சாபி. (இவர்களுக்குத் தமிழும் தெரியாது)

ஸ்டேட் போர்டு பிரிவிலிருந்து பிரதிநிதிகள் யாரும் கிடை யாது. கல்வியாளர் குழுவில் இடம் பெற்றிட அரசுப் பள்ளிகளி லிருந்து ஒரு தலைமை ஆசிரியர்கூட கிடைக்கவேயில்லை (அரசுத் துறைப் பள்ளிகளைப்பற்றி அரசுக்கு அப்படி ஒரு இளக்காரம் போலும்)  இதனைப் பார்க்கும் பொழுது இந்தக் குழுவின் முடிவு எப்படி இருக்கும் என்பது மிகவும் வெளிப்படை!

ஒரு நாயைக் கொல்லுவதற்குமுன் அதற்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூற வேண்டும் என்ற ஆங்கிலேயர் களின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது.

குலக் கல்வித் திட்ட சிந்தனையோடு காய்கள் நகர்த்தப்படுகின்றன. மேல் ஜாதிக்காரனும், கீழ் ஜாதிக்காரனும் ஒரே மாதிரியான சமத்துவக் கல்வியைப் பெறக் கூடாது என்ற மனப்பான்மை இதற்குள் கொடுக்கு நீட்டிக் கொண்டு இருக்கிறது.

குலக்கல்வித் திட்ட காலத்தில் எழுந்த உணர்வு மீண்டும் வெடிக்கும் நிலையை அரசு உருவாக்குமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக