புதன், 22 ஜூன், 2011

இடதுசாரிகள் இணைவதே நல்லது


இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்டு) ஆகிய இரு கட்சிகளும் இணைவது பற்றி குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை பேச்சு அடிபடுவதும் பின் மறைந்து விடுவதும் வழக்கமாக இருந்து வருகிற ஒன்றாகும்.

இப்பொழுது சி.பி.எம். கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி இரு கட்சிகளின் இணைப்புக் குறித்து கொஞ்சம் அழுத்தமாகவே கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் ஆட்சியில் இருந்த சி.பி.எம். கட்சி நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் இரு அமைப்புகளும் ஒன்றாகவே இணைவது குறித்து ஆலோசிப்பது நல்லதுதான்.

இரு கட்சிகளுக்கும் கொள்கை அளவில் அப்படி ஒரு பெரிய மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லையே!

1962ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய - சீன போரின் போது ஏற்பட்ட கருத்து மாறுபாடு கம்யூனிஸ்டுக் கட்சி பிளவுபட்டதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. 49 ஆண்டுகள் உருண்டோடி விட்டன; இப்பொழுது அது தொடர்பான விவாத - பிரதிவாதங்கள் பயனற்றவை. நாடு இருக்கும் இந்தக் கால கட்டத்தில் இடதுசாரிகள் பலம் பெறுவது அவசியம் என்று உணரப்படுகிறது.

காங்கிரசுக்கு அடுத்து பாரதீய ஜனதா கட்சி என்ற நிலை இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல! பா.ஜ.க. மற்றும் அதன் சங்பரிவார்களினால் நாட்டுக்கு இழைக்கப்படும் தீங்குகள் போதும், போதும்! - இனி நாடு தாங்காது!!

பாரதீய ஜனதா ஓர் அபாயகரமான மதவெறிக் கட்சியாக இருந்தும், ஏதோ ஒரு காரணத்துக்காக காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்று கருதுகிறவர்கள் வேறு வழியின்றி பி.ஜே.பி.க்கு வாக்களிக்கும் நிலை இருப்பதை யதார்த்தத்தில் காண முடிகிறது.
இந்த நிலை மாற வேண்டுமானால் இந்தியாவில் இடதுசாரிகள் பலம் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். தேர்தலில் சில இடங்களுக்காக ஜன சங்கத்துடன் கூட கூட்டணி வைத்துக் கொள்ளும்  பரிதாப நிலை இடதுசாரிகளுக்கு ஏற்பட்டதுண்டு.

இத்தகு மன நிலையத்திலிருந்து இடதுசாரிகள் மாறுபட்டு நிற்க வேண்டும்.

வருண பேதமும், வர்க்க பேதமும்  தலைவிரித்தாடும் இந்தியத் துணைக் கண்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி இங்கு வளருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.

ஜாதி முதன்மையான பிரச்சினையல்ல; பொருளாதார வேறுபாட்டைத் தூக்கி எறிந்தாலே வருணபேதம் தானாகச் செத்துப் போய் விடும்  என்ற எண்ணத்தில் அதிகமான காலத்தை வீணடித்து விட்டனர் இந்த இடதுசாரிகள்.

உண்மை என்னவென்றால் தொழிற்சங்கத்தைக் கட்டுவதற்கு ஜாதிகள் தடையாக உள்ளன என்று தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சிந்தன் போன்றவர்களே மிகவும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பேசியுள்ளனர்.

நியாயமாக தந்தை பெரியாரும் அவர் கண்ட தன்மான இயக்கமான திராவிடர் கழகமும் எடுத்துக் கொண்ட இத்தகையிலான கொள்கைகளை இந்த நாட்டில் பொதுவுடைமைக் கட்சிகள் முதன்மைப்படுத்திப் போராடி இருந்திருக்க வேண்டும்.

ஜாதி ஒழிக்கப்படாமல் தீண்டாமை ஒழிக்கப்பட முடியாது என்ற கருத்தில் தெளிவாகவும் திட்பமாகவும் இருந்திருக்க வேண்டும்; கெட்ட வாய்ப்பாக இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுத் தலைவர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதி  வாலை ஒட்டி வைத்துக் கொண்டதுதான் வேதனையிலும் வேதனை!

நம் பூதிரிகளும், முகர்ஜிகளும், சட்டர்ஜிகளும் கட்சியின் தலைமைப் பீடத்தில் இருந்தால் இளைஞர்கள் மத்தியிலே ஜாதி ஒழிப்பு எழுச்சி எக்காளம் எப்படி வெடித்துக் கிளம்ப முடியும்?

இரண்டாவதாக தொழிற்சங்கங்களை சங்கத் தொழிலாக நடத்தாமல், பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட கல்வி தொழிலாளர்கள் மத்தியிலே புகட்டப்பட வேண்டும். போனசுக்காகவும், சந்தா வசூலிப்புக்காகவும் மட்டுமே.

தொழிற்சங்கம் என்ற நிலைப்பாடு உடைத்து நொறுக்கப்பட வேண்டும். மாறாக தொழிலாளர்களை முற்போக்கு - பகுத்தறிவுச் சிந்தனையாளர்களாக வார்த்தெடுக்க வேண்டும். வாயிற் கூட்டங்கள் இந்த வகையில் ஓங்கி ஒலிக்க வேண்டும். சமூக நீதித் தடத்திலும் கம்யூனிஸ்டுகள் மிகவும் பின்தங்கி இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு 15 சதவிகிதத்துக்குள்தான்; அதே நேரத்தில் தமிழ்நாட்டிலோ 50 விழுக்காடு என்பதைக் கவனிக்க வேண்டும். இது நிலைநாட்டப்படுவதற்குக் காரணம் திராவிட இயக்கக் கோட்பாடுதான் என்பதை மறுக்க முடியாது.

பெண்ணுரிமைத் தடத்திலும் பெரியாரியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தேசியக் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் குற்றம் ஏதும் இல்லை.

ஈழத் தமிழர் பிரச்சினையில் பாசிச வாதியான ராஜபக்சேவுக்கு சீனா துணை போகும் நிலையில், அதனைக் கண்டிக்கும் துணிவான நிலைப்பாட்டை எடுப்பதற்கு கம்யூனிஸ்டுக் கட்சிகள் தயக்கமே காட்டக் கூடாது!

பிறவி ஏற்றத் தாழ்வும், பொருளாதார ஏற்றத் தாழ்வும் உள்ள ஒரு நாட்டில் கம்யூனிசம் வளரவில்லை என்றால் அதற்குக் காரணம் அந்தத் தத்துவம் அல்ல! அதனைக் கையில் எடுத்துக் கொண்டுள்ள தலைவர்கள்தான் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இடதுசாரிகள் மூன்றாவது அணியாக அல்ல - இரண்டாவது இடத்தில் உள்ள பாரதீய ஜனதாவை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றும் இரண்டாவது சக்தியாக வளர வேண்டும் - அது நாட்டுக்கு மிகவும் நல்லது. இடதுசாரிகள் இணைந்திட நமது நல் வாழ்த்துக்கள்!


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக