புதன், 22 ஜூன், 2011

புத்திசாலித் தனமாக நடந்துக் கொள்ளுமா இந்தியா?


ஈழத் தமிழர் பிரச்சினைக்காக  ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும்; இந்திய அரசு மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசுக்குப் பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்கிற வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈழத் தமிழர் தொடர்பாக முதன்முதலாக இப்பொழுதுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூற முடியாது. இதற்கு முன்பும்கூட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால் எந்த அளவுக்கு பலன் கிட்டியுள்ளன என்பது கேள்விக்குறியாகும். கடந்த 8ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்ட பிறகு மறுநாள் 9ஆம் தேதி மாலை தேசி யப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கரமேனன் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமையன்று (11.6.2011) தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கரமேனன் தலைமையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் பாதுகாப்புத்துறை செயலாளர் பிரதீப்குமார் ஆகியோர் இலங்கை சென்று நேற்று அதிபர் ராஜபக்சேயைச் சந்தித்துப் பேசி யுள்ளனர்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்று கருதப்பட்டது உண்மைதான். ஆனால் வெளிவந் துள்ள தகவல்கள் பழைய குருடி கதவை திறடி என்ற பாங்கில்தான் அமைந்துள்ளன.

1987ஆம் ஆண்டில் இந்தியா - இலங்கை இரு நாடுகளுக்கிடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தில் கண்டுள்ளவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். அதனை எதிர்த்து தனது சகக் கூட்டணி கட்சியான ஜெவி விபி மூலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரச் செய்து வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு கூடாது என்று சாதகமாகத் தீர்ப்புப் பெற்றுக் கொண்டாகிவிட்டது.

தமிழர்களுக்குச் சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. காவல்துறை அதிகாரம் மற்றும் நில அதி காரமும் வழங்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.

இவற்றைத் தவிர்த்த வேறு அதிகாரங்கள் அளிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று வெறி பிடித்த உச்சாணிக் கொம்பிலிருந்து, மமதையுடன் 120 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய நாட்டின் தூதர்களிடம் கூறி இருக்கிறார் ராஜபக்சே.

இதற்குமேலும் இந்தியா எப்படி நடந்து கொள்ளப்போகிறது என்பதுதான் முக்கியமானதாகும். சர்வதேச நிலைப்பாடுகள் என்று காரணம் கூறி வழக்கம் போல வழ வழா என்ற போக்கில் நடந்து கொள்ளுமேயானால் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் இந்திய அரசின்மீதான ஒட்டு மொத்தமான நம்பிக்கையும் போயே போய்விடும் என்பது மட்டும் கெட்டியான உண்மையாகும்.

இந்திய நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங்கள் ராஜபக்சேவுக்கு  வெண்சாமரம் வீசிக் கொண்டு இருக்கின்றன; அதைப் பயன்படுத்தி தமிழர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி விடலாம் என்று இந்தியா நினைத்தால், அது ஒரு மோசமான நிலைப் பாடாகத் தான் இருக்க முடியும்.

இலங்கைப் பிரச்சினையில், இலங்கை அரசுக்கு சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பக்கபலமாக உள்ளன. இந்த இரு நாடுகளும் இந்தியாவின் எதிரி நாடுகளாகிவிட்ட சூழலில் ராஜதந்திரமாக நடந்து இலங்கையிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா கருவதாகத் தெரிகிறது.

அதுவும் புத்திசாலித்தனமல்ல. இலங்கையில் சீனா எல்லா வகையிலும் காலூன்றிவிட்டது. இலங்கைக்கு இந்தியா தமிழர்களைப் பலி கொடுத்துக்கூட ஆதரவுக் கரம் நீட்டினாலும், இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம்தான் இலங்கை விசுவாசத்தைக் காட்டிக் கொண்டு திரிகிறது. இதன் காரணமாக இரண்டு நிலைகளிலும் தோல்விகளை, இழப்புகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது இந்தியா.

போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை விசா ரணைக் கூண்டில் ஏற்றுவதற்குப் பரவலான ஆதரவு உலக நாடுகளிடம் உள்ளது. இந்தக் கயிறைப் பிடித் துக் கொண்டு உலக நாடுகளின் செல்வாக்கையும், ஆதரவையும் இந்தியா பற்றிக் கொண்டு செயல்படுவது எல்லா வகையிலும் புத்திசாலித்தனமான தாகும்.

அதன் மூலமே இலங்கையின் நெருங்கிய கூட் டாளிகளையும் தனிமைப்படுத்திக் காட்டவும் முடியும் என்பதை இந்தியா உணர வேண்டும். நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்தியா புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுமாக!

இலங்கையிடம் கெஞ்சிப் பார்த்ததெல்லாம் போதும் - இனி மிஞ்ச வேண்டியதுதான் சரியான அணுகு முறையாக இருக்கமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக