புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சி  ஈராண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

மெச்சும்படியாகவோ, சாதனைகளைச் செய்து நிமிர்ந்து நிற்கிறது என்று சொல்லும்படியாகவோ இந்த  ஈராண்டுகளும் இல்லை என்பது வெளிப்படையான உண்மையாகும்.

நிதி அமைச்சரே பாதிக்கப்பட்ட பொதுமக்களோடு சேர்ந்துகொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒப்பாரி வைப்பது விசித்திரமானதாகும்.

அடிப்படை மூலப் பொருளான பெட்ரோலும், டீசலும் விலை உயர்ந்தால், நாட்டில் அத்தனைப் பொருள்களின் விலைவாசியும்  இறக்கை கட்டிக் கொண்டு வானத்தில் பறக்கும் என்பது பாலபாடம் அல்லவா?

பெட்ரோலின் விலையை உயர்த்தும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடத்திலேயே ஒப்படைத்துக் கொண்டால், அதன் விளைவு என்னவாகும்?

உலக வணிகத்தில் பெட்ரோல் கச்சாப் பொருள்களின் விலை உயர்வால் பெட்ரோல் உற்பத்தி செலவு அதிகமாகிறது; அதனால் பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்கப்படவே முடியாத நிலையில் உள்ளது என்று காரணங்கள் கூறப்படுகிறது.

பெட்ரோலுக்குரிய கச்சாப் பொருள்கள் வெளி வணிகத்தில் குறையும்போது, எப்பொழுதாவது பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைத்திருக்கிறார்களா? இல்லை என்கிறபோது, கச்சாப் பொருள்களின் விலை உயர்வைக் காரணம் காட்டி, பெட்ரோல் விலையை உயர்த்துவது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்?

முக்கிய எண்ணெய் நிறுவனங்களான I.O.C. H.P.C.L., B.P.C.L. ஆகியவற்றின் கடந்த நான்கு மாதங்களின் இலாபம் 10,699.61 கோடி ரூபாய் என்கிறபோது எண்ணெய் நிறுவனங்களின் இழப்பினை ஈடுகட்டவே விலை உயர்வு என்று கூறுவது அசல் ஏமாற்று வேலையல்லவா?
பயனற்ற பல துறைகளுக்குப் பன்னூறு கோடி ரூபாய்களை ஒதுக்கும் வீண் செலவினை ஒதுக்கிவிட்டு அத்தியாவசியமான துறைகளின் பக்கம் நிதியைத் திருப்பி விட்டாலே பல பிரச்சினைகளுக்கு எளிதாகத் தீர்வு கிடைத்துவிடும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் வெளியுறவுக் கொள்கை மிகவும் கவனத்துக்கு உரியது. தமிழ்நாட்டில் இருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் இலங்கை சிங்கள வெறி அரசின் முப்படைகளால் தாக்கப்பட்டு அழிப்பதை இந்தியா தடுக்க முடியாததற்குக் காரணம் அதன் வெளியுறவுக் கொள்கையின் தடுமாற்றமே.

நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பதிலே கூட தடுமாற்றம் என்றால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி சாலச் சிறந்ததாக இருக்கமுடியும்?

பல வகைகளிலும் இந்தியாவுக்கு எதிர் நிலையிலும் தொல்லைகளைக் கொடுப்பதில் முதல் நிலையிலும் இருக்கக் கூடிய சீனா, பாகிஸ்தானோடு கைகோத்துக் கொண்டு இலங்கை அரசுக்கு இந்தியா போட்டிபோட்டுக் கொண்டு உதவி செய்கிறது என்றால், இந்த இடத்தில் ஏதோ அடிப்படைக் கோளாறு இருக்கிறது என்றுதானே பொருள்?

இவ்வளவுக்கும் பல முக்கியமான காலகட்டங்களில் யுத்தக் களங்களில் இலங்கை இந்தியாவுக்கு எதிர் நிலையில்தானே இருந்திருக்கிறது? அந்த வகையில் பார்த்தாலும் இந்தியாவின் நிலைப்பாடு என்பது தவறானது என்று எளிதில் முடிவுக்கு வந்துவிட முடியும்.

குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்திய அரசின் நிலைப்பாடு என்பது மிகமிகக் கீழ் இறங்கிய நிலையிலேயே உள்ளதா - இல்லையா என்பதை காங்கிரஸ்காரர்களை அழைத்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா மத்திய அரசு?

மூன்றாவது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள சமூக நீதித் தடத்திலும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் இந்திய அரசின் நிலைப்பாடு இல்லை. சுதர்சன நாச்சியப்பன் போன்ற சமூக நீதியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டு இருந்த வாய்ப்பும் பறிக்கப்பட்டுவிட்டது. இதுதான் மத்திய அரசின் மனோபாவம்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்கிற சட்டம் இதோ வருகிறது, அதோ வருகிறது என்று பராக்குப்பாட்டை எத்தனை ஆண்டு காலம் கேட்டுக் கொண்டிருப்பது?

மக்கள் தொகையில் 50 விழுக்காடு உள்ள பெண்களை சவாலுக்கு இழுக்கும் நிலைப்பாடு அல்லவா இது?

நான்காவதாக சிறுபான்மை மக்களின் பிரச்சினை. 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இந்தியாவில் உள்ள இந்துத்துவ தீவிரவாதிகளால் அயோத்தியில் சிறுபான்மை மக்களின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. உடனே அது கட்டிக் கொடுக்கப்படும் என்றார் அன்றை பிரதமர் பி.வி.நரசிம்மராவ் சொன்னதைச் செய்தார்களா?

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனரா? இந்த நிலையில் சிறுபான்மை மக்கள் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறித்து எத்தகைய மதிப்பீடு இருக்க முடியும்?

அடுத்தடுத்து வரும் ஆண்டுகளிலாவது மக்கள் நலன் போற்றும் அரசாக நடந்து கொள்ளட்டும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு!


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக