புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
குற்றாலத்தில் நடைபெற்ற  பெரியாரியல் பயிற்சி முகாமையொட்டி 26.5.2011 மாலை பகுத்தறிவாளர் கழகப் புரவலர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தென் மாவட்டங்களில் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக விடுதலை ஏடு அரசு நூலகங் களில் நிறுத்தப்பட்டது குறித்துத் தோழர்கள் தெரிவித்த கருத்தும் விடுதலை ஆசிரியர் அவர்கள் வலியுறுத்திய கருத்தும் இக்கால கட்டத்தில் மிகவும் முக்கியமானவையாகும்.

விடுதலை என்பது அறிவாயுதமாகும். அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று 49 ஆண்டுகள் ஓடி விட்டன.

எனது வாழ்க்கையில் கழகப் பணி - விடுதலைப் பணி என்பவை இரண்டும் என் இரு விழிகள்! அந்த விடுதலைக்கு ஒரு சவால் என்கிற போது, அதனை ஏற்றுக் கொண்டு, விடுதலை சந்தாக்களை பல்லாயிரக்கணக்கில் பெருக்கியே தீருவது என்ற உணர்வு நம் தோழர்கள் மத்தியில் நம்பியிருப்பது   எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகத் தையும் அளிக்கிறது! என்றார் தமிழர் தலைவர் அவர்கள்.

தேர்தலில் தன்னை ஆதரிக்கவில்லையே என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் கருதியிருக்கக் கூடும். ஆதரிப்பது - எதிர்ப்பது என்பது ஒவ்வொரு வருக்கும் உரிய கருத்துரிமை ஆகும். என்னை ஆதரித்தால்தான் என் ஆதரவு உண்டு;  - எதிர்த்தால் இப்படித்தான் நடந்து கொள்வேன் என ஒரு முதல் அமைச்சர் கருதுவாரேயானால் அது ஜனநாயகக் கோட்பாட்டுக்கே விரோதமாகும்.

அதுவும் அண்ணா பெயரையும் திராவிட  என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் தாங்கிக் கொண்டிருக்கும் கட்சியின் பொதுச் செயலாளர், அண்ணா ஆசிரியராக இருந்த திராவிட இயக்கத்தின் தாய் ஏடான விடுதலையை உதாசீனம் செய்வது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?

ஆட்சியின் இத்தகு நடவடிக்கையால் ஏற்படும் தார்மீகக் கோபத்தைத் தோழர்கள் விடுதலைக்கு சந்தா சேர்ப்பதில் திருப்பி விட வேண்டும்.

ஆட்சியின் இத்தகு செயலால் நாம் சோர்ந்து விட்டோமா மாறாகக் கிளர்ந்து எழுந்து ஒன்றுக்குப் பலவாக விடுதலை சந்தாக்களைப் பெருக் கினோமானால்  அவை செயல்பாடுகள் என்ற வகை யில் தீவிரத் தன்மை கொண்டவையாக இருக்கும்.

2000 விடுதலை சந்தாக்களை சேர்த்துத் தருவதாக பகுத்தறிவாளர் கழகம் தீர்மானம் செய்துள்ளது. மேலும் விடுதலை வளர்ச்சி நிதியையும் திரட்டித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பல தோழர்கள் இதே கூட்டத்தில் நிதிகளையும், சந்தா தொகையையும் அளித்தனர். இந்தக் கால கட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் இந்தச் செயல்பாடு சாலச் சிறந்தது  - வழிகாட்டத் தகுந்த பெருமைக்கு உரியதுமாகும். அதற்காகப் பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர்களையும், தோழர் களையும் வெகுவாக பாராட்டுகிறோம்.

விடுதலைக்குச் சோதனை என்பது புதிதான ஒன்றல்ல. அத போல நமது இயக்க ஏடுகளுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளும் புதுமையானவையல்ல!

குடிஅரசு இதழ் விடுதலை ஏடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுண்டு. ஜாமீன் தொகை கட்டப்பட வேண்டும் என்று ஆங்கிலேயர் ஆட்சியில் பல நேரங்களில் கோரப்பட்டதும் உண்டு.

விடுதலையால் உரிமை பெற்ற, உணர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மக்கள் கேட்டதற்கு மேலாகவே வெள்ளிப் பணத்தை அள்ளித் தந்தனர்.

அந்தவுணர்வு இப்பொழுது மட்டும் வற்றிப் போய் விடவில்லை என்று காட்ட வேண்டியது தமிழர்களின் தலையாய கடமையாகும்.

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் திளைத்துக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், குறிப்பாக பெண்களும் கை நிறைய சம்பளம் பெற்றுக் கொண்டிருக்க வில்லையா? அதில் ஒரு துளியை விடுதலை வளர்ச்சிக்கு எருவாகத் தரக் கூடாதா?

விடுதலை தானே நமக்குப் பாதுகாப்பரண் விடுதலை வீழ்ந்தால் யாரே வாழ்வர்? என்ற வினாவை எழுப்பிப் பார்க்கட்டும் - விடை எளிதாக கிடைக்குமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக