புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
1984ஆம்  ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மத்தியப் பிரதேசம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஆலையில் உயிர்க்கொல்லியான மீத்தைல் அசோ சயனேட் நச்சு வாயு கசிந்ததன் காரணமாக இரவில் படுக்கைக்குச் சென்ற 15 ஆயிரம்   பேர் பிணமாகக் கிடந்தனர்.

உடல் ஊனமுற்றோர் 5,74,367 பேர் என்று சொல்லப்பட்டாலும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கணக்குச் சொல்லப்பட்டது.

திடுதிப்பென்று இக்கொடுமை நடந்து முடிந்துவிட்டது. உலகெங்கும் இந்தத் துன்ப அலை அடித்து மோதியது.

இதில் உள்ள கொடுமை என்னவென்றால் இந்த ஆலையின் தலைவர் ஆண்டர்சன் பத்திரமாக அவசர அவசரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

1996ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பு வழங்கியது. மனித குலம் நடுநடுங்கும் இந்தப் பேரழிவுத் துயரத்திற்குக் காரணமான ஏழு பேர்களுக்குத் தலா இரண்டாண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த அளவே இழப்பீடும் வழங்கப்பட்டது. கொடிய நிகழ்வுக்கு மிகக் குறைந்த அளவு தண்டனையா என்னும் சர்ச்சை வெடித்துக் கிளம்பியது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இழப்பீடு தொகை ரூ.750 கோடியிலிருந்து 7700 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு முறையீடு செய்தது. குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது சிறைத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. 16 ஆண்டுகள் கழித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுவது ஏன் என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது (11.5.2011).

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிகள் மாறி மாறி வந்த நிலையிலும்; மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் அலட்சியமே காட்டப்பட்டது என்பது மிகப் பெரிய கொடுமையாகும்.

இந்தக் கொடிய விபத்துக் காரணமாகப் பலியானவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும், முஸ்லிம்களுமே ஆவார்கள்.

பாராமுகமாக ஆட்சிகள் இருந்ததற்கு இதுவும்கூட ஒரு காரணமாக இருக்கக் கூடும். வருண தர்ம சமூக அமைப்பில் எல்லாப் பிரச்சினைகளிலும் வருணப் பார்வை இருப்பதை மறுக்க முடியாதே!

பாதிக்கப்பட்ட மக்கள் போபாலில் இருந்து நடந்தே வந்து டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, தங்கள் நிலையை எடுத்துக் கூறி நிவாரணம் வழங்க வேண்டும் என்றுகூடக் கேட்டதுண்டு. ஆனால் இரக்கம்தான் பிறக்கவில்லை இந்திய ஆட்சியாளர் களுக்கு.  இன்னும்கூட பாதிக்கப்பட்ட 6000 மக்கள் நாள்தோறும் மருத்துவமனைக்குச் செல்லும் அவல நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து பல்வேறு அபாயகரமான எண்ணங்களை நமக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

இன்று பல  நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப் போடு இந்தியாவில் நிறுவப்படுகின்றனவே - இதன்பின் விளைவு எப்படி இருக்கும் என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் ரத்தம் உறைபனியாகிறது. இப்பொழுது ஒரு சட்டம் வர இருக்கிறது.

அதன்படி இந்தியாவில் நிறுவப்படும் அணு தொழிற்சாலைகளில் இழப்புகள் ஏற்பட்டால் அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அதற்கான இழப்பீடு - நிவாரணத் தொகை அளிக்க வேண்டிய தில்லையாம்;  என்ன கொடுமையடா இது!

குதிரை கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியும் பறித்ததுபோல, யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் தேங்கிய 350 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை அழிப்பது என்பது பெரும் பிரச்சினையாகி  விட்டது. 10 ஆயிரம் மெட்ரிக்டன் வேதிக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டிய கொடுமையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டதால் வேலை வாய்ப்புப் பறிக்கப்பட்ட 9000 தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்தியாவில் மிகவும் மலிவானது மக்கள், அதுவும் பாமர மக்களின் உயிர்தான் என்று கருத வேண்டியுள்ளது.

ஆட்சி, நிர்வாகம், நீதித்துறை இவை மக்களைப் பாதுகாக்கும் அமைப்பாக இந்தியாவில் இல்லை என்று மட்டும் ஒரே வரியில் சொல்லி விடலாம் என்று தோன்றுகிறது. மக்களிடையே பகுத்தறிவுச் சிந்தனையும், எழுச்சியும் இல்லாவிட்டால் இந்தவகையில் ஏராளமான இடர்ப்பாடுகளைச் சந்தித்துத்தான் தீர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக