புதன், 22 ஜூன், 2011

நெய்வேலி போராட்டம்


மினிரத்னாவை அடுத்த மகாரத்னம் எனும் தகுதி பெறவிருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்பது பொன் முட்டையிடும் தங்க வாத்தாகும்.

1957ஆம் ஆண்டில் பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் பெரும் முயற்சியினால் கொண்டு வரப்பட்ட இந்த நிறுவனம் 1975ஆம் ஆண்டு வரை நட்டக் கணக்கில்தான் பின்னல் நடைபோட்டு வந்தது. அதற்குப்பிறகு படிப்படியாக வளர்ந்து, லாபக் கனிகளைத் தந்து 2010-2011ஆம் ஆண்டில் மட்டும் 1,298 கோடி ரூபாயை லாபமாகக் கொட்டியது.

தனியார்த் துறையில் தான் நிருவாகம் நன்னா நடக்கும் பொதுத்துறை என்றால் பொறுப்பான முறையில் நிருவாகம் இருக்காது - நட்டம்தான் ஆகும் என்று வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்கிற வகையில் ராகம் பாடும் கூட்டமும், முதலாளித்துவ ஊடகங்களும் இந்நாட்டில் உண்டு.

இந்தியாவில் நவரத்தினங்கள் என்று கூறப்படும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெல் நிறுவனம் போன்றவை அந்தப் பொய்க் கூற்றின் முகத்திரையைக் கிழித்தெறிந்து வீர நடைபோட்டு வந்துகொண்டு இருக்கின்றன.

மேலும் மேலும் வளர்ச்சித் திசையில் சென்று மின்பற்றாக் குறையைச் சிதறடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் நங்கூரம் பாய்ச்சியுள்ளது.

ஆனால் மத்திய அரசோ பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார் வயிற்றில் அறுத்துக் கட்டவே துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக தனியாருக்குப் பங்குகள் விற்கப்படும் - ஆலோசனையில் இருந்துவருகிறது என்ற அறிவிப்பு வருவதும், உடனே திராவிடர் கழகக் களத்தில் இறங்கிப் போராடுவது என்பதும் வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

2009 ஜூலை 9ஆம் தேதியன்றும், 2010 ஜூன் 30 ஆம் தேதியன்றும்  இதே காரணத்துக்காக திராவிடர் கழகக் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுண்டு. இப்பொழுது மீண்டும் ஜூன் 8ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. பொறுப்பு வாய்ந்த ஓர் அரசு, ஓடி விளையாடும் பாப்பாவாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.

இதே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தருணத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம்  ஒன்றினை வெளியிட்டதே! அதில் சொல்லப்பட்டது என்ன?

லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் கையை விட்டுப் போய் விடாது. அதன் பங்குகள் விற்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறவில்லையா?

ஞாபகமறதிக்குப் பெயர் போனவர்கள்தானே பொது மக்கள் என்ற அலட்சியமான நினைப்பா? மக்கள் மறந்தாலும் கறுஞ்சட்டைப் பட்டாளம் மறந்து விடாதே! அது 24 மணி நேரமும் கண் துஞ்சாப் பட்டாளம் - கடிகாரம் என்பதை மறந்துவிட வேண்டாம்!

தனியார் துறைக்குத் தாரை வார்ப்பதில் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் வேலை வாய்ப்பில் அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு கத்தி தீட்டப்பட்டு விடாதா! சமூகநீதியைக் காவு கொடுக்கும் சூழ்ச்சியும் இதன் திரையில் மறைந்து கிடக்கிறதே! காவலுக்குக் கெட்டிக்காரனாகிய கருஞ்சட்டைக்காரன் இந்தப் பிரச்சினையை மிகவும் நுட்பமாகப் பார்க்கக் கூடியவன் ஆயிற்றே!

தற்போது 2470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 12ஆம் அய்ந்தாண்டுத் திட்டத்தில் 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, ஆந்திர மாநிலம், புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களின் மின்சாரத்தை வாரி வழங்குவது இந்தச் சுரங்கமே.

நெய்வேலி, கல்பாக்கம் ஆகியவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 20 விழுக்காடு மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு (ரொம்பப் பெருந்தன்மைதான்!) மற்றதை அடுத்த மாநிலங்களுக்குத் தானம் கொடுத்துவிட்டு அதன் துயரத்தை பல வகைகளிலும் தமிழர்கள் தூக்கிச் சுமக்க வேண்டியுள்ள பரிதாப நிலை! இந்தியத் தேசியம் என்றால் இது போன்ற விலைகளைக் கொடுத்துத்தானே தீர வேண்டும்!

செயங்கொண்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கப்பட இருப்பதாகச் சொல்லப்பட்டது. இனிமேல்தான் கோழி முட்டை போட்டு, குஞ்சு பொரித்து, அந்தக் குஞ்சு, பெரிய கோழியாகி, முட்டைப் போட வேண்டும் அதுவரை ஏமாளித் தமிழர்கள் பொறுமை என்னும் நகையணிந்து சிறுமை கொள்ள வேண்டும்.

அது வருவதற்குள்ளே உள்ளதும் போச்சே என்று ஒப்பாரி வைக்கும் நிலையைத் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்ற முடிவில் ஜூன் 8ஆம் தேதி துணைப் பொதுச் செயலாளர் மானமிகு துரை. சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தைக் கழகத் தலைவர் அவர்கள் தக்க நேரத்தில் அறிவித்துள்ளார். சிறுபிள்ளைவிளையாட்டில் - தவணை முறையில் விளையாடும் வேலையில் மத்திய அரசு ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

சுற்று வட்டார மாவட்டக் கழகத் தோழர்கள், நாட்டு நலனில் அக்கறை கொண்ட தமிழர்கள் அனைவரும் கழகம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் பேரளவில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

போராடுவோம் வெற்றி பெறுவோம் வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! வாழ்க பெரியார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக