புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
இலங்கை - இந்தியா ஆட்சித் தலைவர்களோ அதிகாரிகளோ இலங்கைக்குச் சென்றாலும், இந்தி யாவுக்கு வந்தாலும் தமிழர்கள் மடியில் நெருப்பைத் தான் கட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.
தமிழர்களுக்கு எதிராக ஏதோ சதி உருவாகிறது என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும். இதுவரை நடந்திருக்கும் நிகழ்வுகள்தான் இதற்குக் காரணமாகும்.
இரண்டு நாள் பயணமாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசி உள்ளார்.
இந்தப் பேச்சில் தமிழக மீனவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள், துப்பாக்கிச் சூடுகள் பற்றிய பிரச்சினை முக்கிய இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இரு தரப்புப் பேச்சு  முடிவில் இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கையும் விடப்பட்டுள்ளது.
அனைத்து மீனவர்களும் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார்கள்; எந்தச் சூழ்நிலையிலும் மீனவர் களுக்கு எதிராக வன்முறை செய்வதை நியாயப் படுத்த முடியாது என்று இந்தியாவும் - இலங்கையும் ஒப்புக்கொண்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக இலங்கை அரசின் சார்பில் அவ்வப்பொழுது அளிக்கப்படும் வாக்குறுதிகள் வெறும் காகிதக் குப்பையாக இருந்திருக்கின்றனவே யன்றி, பொறுப்பு வாய்ந்த அரசு அளித்த பொறுப்பான உறுதிமொழி என்று நம்பத்தகுந்ததாக இருந்த தில்லை.
உலகின் மிகப் பெரிய  நாடுகளில் ஒன்றாகக் கூறப்படும், அடுத்து வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம் பெறத் துடிக்கும் இந்தியாவும், சுண்டைக்காய் நாடான இலங்கை தம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக நடந்து கொள்கிறதே - துச்சமாக மதிக்கிறதே என்கிற தன்மான உணர்வும் எந்த நிலையிலும் இந்தியத் தரப்பிலும் இருந்ததில்லை. அந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டதும் கிடையாது.
ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழக மீனவர்களாக இருந்தாலும் சரி இதில் பாதிக்கப் படுவோர் தமிழர்களாக இருப்பதால்தான் இந்த அலட்சியம் என்பது - உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் முடிந்த முடிவாகும்.
இந்திய அரசும் சரி, அதன் ஆலோசகர்களாக பெரும்பாலும் இருப்பவர்களும் சரி, பார்ப்பனர் களாகவும், மலையாளிகளாகவும் இருக்கும் காரணத்தால் தமிழின எதிர்ப்பு - வெறுப்பு என்பது அவர்களின் ரத்தத்தில் ஊடுருவி விட்டதாகவே ஆகி விட்டது.
குறைந்தபட்சம் இலங்கைத் தீவுக்கு இந்திய அரசின் தூதராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று எத்தனைக் கோரிக்கைகளை, தீர்மானங்களை முன் வைத்திருப்போம் - இந்திய அரசு அசைந்து கொடுத்திருக்கிறதா?
என்ன கொடுமை! ஒரு 18 ஆண்டுகளில் (1983 முதல்) இதுவரை 572 தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் என்றால், இதற்கு இதுவரை முடிவும் எட்டப்படவில்லை யென்றால், அது தொடர் கதையாக இருக்கிறது என்றால், இந்திய அரசு சார்பிலோ, இலங்கை அரசு சார்பிலோ ஏதாவது வாக்குறுதி அளிக்கப்பட்டால் அதற்கு அர்த்தம் உண்டு என்று நினைப்பதற்கு, மதிப்பதற்கு இடம் இருக்கிறதா? கடலில் கோடு போட்டுக் கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க முடியுமா? இலங்கை மீனவர்கள் தமிழ் நாட்டின் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கிறார்களே, இந்திய கடற்படை அவர்களைத் துன்புறுத்துவது உண்டா - துப்பாக்கியால் சுட்டதுண்டா?
இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடித்தார்கள் என்பதற்காக பாகிஸ்தான் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வந்ததுண்டா?
மேற்கு வங்க மீனவர்கள் பங்களா தேச கடல் எல்லைக்குள்ளும், பங்களா தேச மீனவர்கள் மியான்மா கடல் எல்லைப் பகுதிக்குள்ளும் சென்று மீன்பிடித்ததனால் கொல்லப்பட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டதுண்டா?
தமிழக மீனவர்கள் மட்டும் நாதியற்றவர்களா? இதனைத் தட்டிக் கேட்கும் நிலையில்லாத ஒரு நாட்டின் குடி மக்களாக இருப்பதை நினைத்தால் கண்களில் பீறிட்டு வருவது கண்ணீர் அல்ல, குருதிக் கடல்தான்.
மத்திய அரசு கடமை தவறுவதால் மக்கள் மத்தியில் அவப் பெயரை நேரிடையாகச் சுமப்பது மாநில அரசாகத்தான் இருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இந்தியா - இலங்கை சார்பில் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாவது உண்மையான தாக இருந்தால் மகிழ்ச்சிதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக