புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திருமண உதவி கேட்கும் ஏழைப் பெண்களுக்கு, இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்'' என்று தமிழக அரசு புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிப்படி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன், 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவர் அறிவித்த கையோடு தமிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் இந்த புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது. அந்த அளவுக்கு தங்கத்தின் விலை ஏழைகள் வாங்க முடியாத அளவுக்கு எட்டா நிலைக்குச் சென்று விட்டது. அப்படி இப்படி என்று சிறுகச் சிறுக நகைகளை சேர்த்து வைக்கின்றனர், பெண் பிள்ளை களைப் பெற்றவர்கள். ஒருவழியாக நகைகளை சேர்த்து தங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அத்துடன் தமிழக அரசு கொடுத்த 20,000 ரூபாயும் அவர்களுக்கு ஒரு கடன் சுமையை குறைப்பதாக இருந்தது.

தற்போது அதற்கு இடையூறினை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு. திருமண உதவித் தொகை பெற வேண்டுமானால் பெண்ணின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 24,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று.

கிராமப்புறத்தில் நெற் பயிருக்கு களை எடுக்கும் ஒரு பெண்ணின் ஒரு நாள் கூலி ரூ.100 முதல் ரூ.130 வரை கொடுக்கப்படுகிறது. மண்வெட்டியை எடுத்து வேலைக்குச் சென்றால் ரூ.200, ரூ.250 ரூபாய்க்கு குறைந்து கூலியை வாங்காமல் வருவதில்லை கிராமப்புற மக்கள்.

இப்படி கூலி வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஏழைப் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.35 ஆயிரத்திற்கு மேல் இருக்கும்போது 24 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் திருமண உதவி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது எந்த வகையில் நியாயம்?

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்கள் மிகச் சிறந்தவை. திருமண உதவி, விதவையர்களுக்கு உதவி, கல்வித் தொகை, கலப்புத் திருமணத்துக்கு (ஜாதி ஒழிப்புக்கு) உதவி என்பதுபோன்ற திட்டங்கள் பேருதவியாக இருந்திருக்கின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அரசின் திட்டங்கள் தொடர்வது என்பதுதான் ஆட்சி முறை இலக்கணமாகும். திட்டங்களை அனுமதித்து, அதேநேரத்தில், நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்துவதுபோன்ற நிபந்தனைகளை ஏற்படுத்துவது உகந்ததல்ல.

ஏழைப் பெண்களுக்கான உதவித் திட்டத் திற்கு நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ள ஆண்டு வருவாயை கால நிலையைக் கணக் கிட்டு உயர்த்துவது பயனுள்ளதாகவும், நடைமுறை சாத்தியமாகவும் இருக்குமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக