புதன், 22 ஜூன், 2011


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தி.மு.க. ஆட்சியில் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்குத் தகுதி மதிப்பெண்கள் கடந்த ஆண்டு (2010-2011) அறிவிக்கப்பட்டன.

அதன்படி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பொதுப் பிரிவிற்கு 50 விழுக்காடு மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 விழுக்காடு மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 40 விழுக்காடு மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவினருக்கு 35 விழுக்காடு மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்கள் என்று முடிய செய்து சட்டப் பேரவையில்  அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் அகில இந்திய தொழில் நுட்பக் குழுமம் தேவையில்லாத வகையில் குறுக்குச் சால் ஓட்டும் விதமாக பொறியியல் கல்லூரி சேர்க்கைக்குத் தகுதி மதிப்பெண்களை அறிவித்துள்ளது. பொதுப் பிரிவினருக்கு 50 விழுக்காடு மதிப்பெண்கள் என்றும், மற்றவர்களுக்கு 45 விழுக்காடு மதிப்பெண்கள் என்றும் மாநிலங்களுக்குச் சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது.

2010- 2011 கல்வி கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு பின்பற்றத் தொடங்கிய வழிமுறைகளை நன்கு தெரிந்திருந்தும், அகில இந்தியத் தொழில் நுட்பக் குழுமம் ஏட்டிக்குப் போட்டியாகப் புதிய குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவது தேவைதானா?

தேவையில்லாமல் மாநில அரசோடு மோதும் போக்கு அல்லாமல் இதற்கு என்ன பெயராம்? கல்வி பொதுப் பட்டியலில் இருக்கக் கூடாது; மாநிலப் பட்டியலில் தான் இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் உள்பட சமூக நீதியில் அக்கறை உள்ள கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது ஏன் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டு இருக்கலாமே!

மாநிலப் பட்டியலில் தானே கல்வி இருந்து வந்தது; நெருக்கடி நிலை காலத்தில் மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்காமலேயே கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்று விட்டனரே! அதனுடைய விளைவு தானே இது?

தகுதி மதிப்பெண்களைக் குறைத்ததால் என்ன கெட்டுப் போய் விட்டது? கடந்த ஆண்டில் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,63,131; எந்தஆண்டையும்விட கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தவர் களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்ததற்குக் காரணம் - திமுக அரசு தகுதி மதிப்பெண்களைக் குறைத்ததுதானே! இந்த 1,63,131 விண்ணப்பங்களில் பொதுப் பிரிவினர் 12553; அதில் இடம் கிடைத்தவர்களின் எண்ணிக்கை 5662. மீதி அத்தனை இடங்களும் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள், பிற்படுத்தப் பட்டோர் மற்றும்  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர்; தானே!

சமூகநீதி நோக்கில் இது எத்தனைப் பெரிய பாய்ச்சல்! எங்கள் வீட்டுப் பிள்ளைகளும் என்ஜினீயர் ஆக முடியுமா என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்த குடும்பங்களில் இப்பொழுது என்ஜினீயர்கள் வந்து விட்டார்களே!

இதனைக் கண்டு திராவிடர் கழகம் எவ்வளவுப் பூரிப்பை அடைகிறது தெரியுமா? சமூகநீதியில் அக்கறை கொண்ட திமுக ஆட்சி எந்த அளவு பெருமிதம் கொள்கிறது தெரியுமா?

எத்தனை மிக என்று வேண்டுமானாலும் நான் பிறந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் முன் போட்டுக் கொள் ளுங்கள் என்று சட்டப் பேரவையில் நெஞ்சு நிமிர்த்தி அறிவித்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஆட்சிப் பீடத்தில் இருந்ததால்தானே இவ்வளவுப் பெரிய மகத்தான சாதனை!

இது பொறுக்கவில்லையா அகில இந்திய தொழில் நுட்பக் குழுமத்துக்கு? பொதுவாக அகில இந்தியத் தேசியம் பேசுவோர் யாராக இருந்தாலும் பெரும்பாலும் சமூகநீதிக்கு எதிராகத் தான் சிந்திக்கக் கூடியவர்களாக  இருக்கிறார்கள்.

மருத்துவக் கல்லூரி தேர்வுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைத்து தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று மருத்துவக் கவுன்சில் கூறுவதும், கூடவே கூடாது - மாநில அளவிலேயே நாங்கள் தேர்வு செய்து கொள்கிறோம் - நுழைவுத் தேர்வை சட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே ரத்து செய்து விட்டது என்று திமுக அரசு கூறுவதும் எந்த அடிப்படையில் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குறைந்த அளவு தகுதி மதிப்பெண் வைத்து சேர்த்துக் கொண்டாலும், தேர்வில் வெற்றி பெற்றால்தானே பொறியாளராக முடியும்?  தேர்வு வைக்காமல் பட்டங்களைக் கொடுப்பதில்லையே.

+2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பொறியியல் இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்று கூற முடியுமா? அதற்கான புள்ளி விவரங்களை அகில இந்தியத் தொழில் நுட்பக் குழுமம் கையில் வைத்துள்ளதா?

இதுபோல எத்தனை எத்தனையோ முட்டுக் கட்டைகளைச் சந்தித்துத்தான் சமூக நீதிக் கொடி தமிழ்நாட்டில் கம்பீரமாகப் பட்டொளி வீசிப் பறந்து கொண்டு இருக்கிறது.

காலாவதியான சரக்கை எடுத்துக் கொண்டு முன்வர வேண்டாம் அகில இந்தியக் குழுக்கள். அகில இந்திய தொழில் நுட்பக்  குழுமத்தின் சுற்றறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்தமைக்குக் கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றி கூறுகிறோம் - பாராட்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக