வெள்ளி, 8 ஜூலை, 2011

இனவுணர்வோடு விளையாட வேண்டாம்



சமச்சீர் கல்வியில் பத்தாம் வகுப்பில் சமூக அறிவியல் பாடத்தில் நீதிக்கட்சி, திராவிட இயக்கம் அதன் தலைவர்கள் பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசனார், டாக்டர் டி.எம். நாயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நீதிக்கட்சி முதல் அமைச்சர்கள் பனகல்ராஜா ஆகியோர் பற்றியும் நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், சாதனைகள் குறித்தும் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்த தேவதாசி ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட மகளிர் முன்னேற்றத் திட்டங்கள் பற்றியும் இடம் பெற்றுள்ளன.

இந்திய விடுதலைக்காக காங்கிரஸ் போராடிக் கொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில் தெற்கில் திராவிட இயக்கம் சமூக விடுதலைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. சமூகநீதி குறித்த தடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவையெல்லாம் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படக் கூடாதாம்.

இவையெல்லாம் ஆட்சேபத்துக்குரிய பகுதிகளாம். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஒன்பது பேர் கொண்ட குழுவில் ஆறு பார்ப்பனர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்தபோதே நாம் கண்டித்தோம். அந்தக் கண்டனம் எவ்வளவு சரியானது என்பதற்கு அடையாளம் தான் சமூகநீதிக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்ட இயக்கத்தின் சாதனைகள் இடம் பெறக்கூடாது என்று குறிப்பிடப் பட்டுள்ளதாகும்.

அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டும், உருவத்தை கொடியில் பொறித்துக் கொண்டும் இருக்கிற ஓர் கட்சி அண்ணாவைப்பற்றி சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று தடை போடுகிறது என்றால் இதைவிட அண்ணாவுக்குச் செய்யும் துரோகம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

திராவிட இயக்கத்தின் வழி வந்தது என்பதாக கட்சியில் திராவிட என்பதைச் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் ஆட்சி திராவிட இயக்கச் சாதனைகள் குறித்து மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடக் கூடாது என்று கூறுகிறது என்றால், அந்தக் கட்சியில் திராவிட என்ற இனச் சுட்டு இடம் பெறலாமா?

பெண்களை பொட்டுக்கட்டி கோயிலில் தாசியாக்கிய கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்த சட்டம் நீதிக் கட்சி ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது. அதற்கு மூல காரணமானவர் இந்தியாவில் முதல் பெண் டாக்டரான முத்துலட்சுமி ரெட்டி! இந்த விவரங்கள் எல்லாம் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் பிரிவினை மனப்பான்மை வந்துவிடும் என்று சொல்லுவதற்கு அண்ணா பெயரில் ஓர் ஆட்சியா?

மத்திய அரசுகூட தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் நூற்றாண்டு விழாவில் அஞ்சல் தலை வெளியிடுகிறது. அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. தந்தை பெரியாருக்கு அய்.நா. மன்றம் விருது அளித்து சிறப்பிக்கிறது.

ஆனால் பெரியார் பெயரையும், அண்ணா பெயரையும் உச்சரிக்கும் - திராவிட கட்சி என்று கூறிக் கொண்டி ருக்கும் அண்ணா திமுக அரசு இவர்களைப்பற்றி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சூளுரைக்கிறது என்றால் இதனைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்கவே மாட்டார்கள்.

நீறுபூத்து நிற்கும் இனவுணர்வைச் சீண்டுவதாகத் தான் இதனைக் கொள்ள வேண்டும். புத்த மார்க்கத்தில், ஆரியம் ஊடுருவி அழித்ததுபோல, திராவிட இயக்கத் தில், ஆரியம் ஊடுருவி உருக்குலைக்க ஒருபோதும் தமிழ்நாடு அனுமதிக்காது.

தந்தை பெரியார் மறைந்து விட்டார், அறிஞர் அண்ணா மறைந்து விட்டார் என்று எண்ண வேண்டாம்! அவர்கள் ஊட்டிய இனவுணர்வு பகுத்தறிவு உணர்வு சாதாரணமானதல்ல - அவை அரசியலுக்கும் அப்பாற் பட்டது என்பதை மறக்க வேண்டாம்.

கல்வியில் கை வைத்த ஆச்சாரியார் (ராஜாஜி), ஆட்சியை விட்டு அகலும்படி நேரிட்டது என்கிற வரலாறு தரும் பாடத்தை அதிமுக அரசு மீண்டும் ஒரு முறை படித்துப் பார்ப்பது நல்லது!

திராவிட இயக்கத் தலைவர்கள், சமூக விரோதிகள் என்ற நினைப்பா? திராவிட இயக்கம் வேண்டப்படாத இயக்கம் என்ற மனப்பான்மையா?

திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி துக்ளக்கில் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதனை எதிரொலிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு அறிக்கையும் உள்ளது என்பது கவனிக்கத்தக்க தாகும். இரண்டையும் இணைத்துப் பார்த்தால் சூட்சமம் புரிந்து விடும்!

பார்ப்பன ஊடகங்களும் தமிழ்த் தேசியம் என்ற பேராலே பார்ப்பனர்களுக்குப் பல்லக்குத் தூக்கும் சக்திகளும் ஆதரவுக் குடைபிடிக்கிறது என்ற எண்ணத் தில் ஒரு நூற்றாண்டு காலம் ஊட்டி வளர்க்கப்பட்ட உணர்வுகளோடு விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் - வேண்டவே வேண்டாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக