வியாழன், 21 ஜூலை, 2011

பொறியியல் கல்லூரியும் - மாணவர் சேர்க்கையும்


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு (கவுன் சிலிங்) நடைபெற்றுக் கொண்டு வருகிறது. கிட்டத் தட்ட 50 விழுக்காடு கலந்துரையாடல் முடியும் நிலையில் உள்ளது.

அதன்படி பார்த்தால் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், அருந்ததி பிரிவினருக்கான இடங்கள் அதிகம் காலியாக உள்ளன.

அருந்ததி பிரிவைச் சேர்ந்த 210 மாணவர்களும், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பிரிவைச் சேர்ந்த 17 ஆயிரத்து 928 மாணவர்களும், பழங்குடி (எஸ்டி) பிரிவைச் சேர்ந்த 481 மாணவர்களும் விண்ணப்பித் திருந்தனர்.

இதில் அருந்ததி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இதுவரை 37 பேர்களும், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பிரிவைச் சேர்ந்தோர் 492 பேர்களும், பழங்குடியினர் (எஸ்டி) பிரிவைச் சேர்ந்த 9 பேர்களும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இந்தப் பிரிவுக்கான பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பித்துள்ளவர்களில் 3 சதவிகித அளவுக்குக்கூட கல்லூரிகளில் சேர முன்வரவில்லை.

அதேநேரத்தில், முன்னேறிய பிரிவைச் சேர்ந்தவர் கள் போட்டியில், திறந்த போட்டியில் 7678 மாணவர்கள் இடங்களைப் பெற்றுள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (30+20 சதவிகிதம்) அளவுக்கு மாணவர்கள் சேர வில்லையென்றாலும், கணிசமான அளவுக்குச் சேர்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 440, பிற்படுத்தப்பட்டோர் 4989, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 2677 மாணவர்கள் இடங்களைப் பெற்றுக் கொண்டுவிட்டனர்.

பொறியியல் கல்லூரிகளில் 25 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதிவரை கலந்தாய்வு நடைபெற இருப்பதால், மேலும் கொஞ்சம் முன்னேற்றம் காணப் படலாம் என்றாலும், இடங்கள் இருந்தும் தாழ்த்தப் பட்டோர் பொறியியல் கல்லூரிகளில் சேர முன்வராதது ஏன்? விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டு கலந்தாய் வுக்குக்கூட வராதது ஏன் என்பது குறித்து சிந்திக்கப்படவேண்டும்.

கல்லூரிகளில் சேர்வதற்கான பணம் இல்லாதது முதன்மையான காரணமாக இருக்க முடியும் - வெளியூர் மாணவர்களாக இருந்தால் விடுதிகளில் தங்கிப் படிக்கும் நிலையில் மேலும் பணம் தேவைப்படக் கூடும்.

இதுகுறித்து அரசு தக்கவர்களைக் கொண்டு ஆய்வு செய்து, விண்ணப்பித்தும் பொறியியல் கல் லூரிகளில் சேர முன்வராதவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இவ்வளவுக்கும் தி.மு.க. ஆட்சியில் பட்டதாரி அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கட்ட ணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக் கப்பட்டது - அது இப்பொழுதும் தொடரத்தான் செய்யும்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலை கவனிக்கப்படவேண்டும். பொறியியல் கல்லூரி யில் சேரவில்லை என்பதற்காக மட்டுமல்ல; இதே நிலை வேறு கல்லூரிகளில் சேரும் பிரச்சினையிலும் ஏற்படக்கூடும்.

பொருளாதாரம்தான் இடர்ப்பாடு என்றால், அதனைச் சரி செய்வதற்கு அரசு முன்வரவேண்டும். வங்கிகளில் கல்விக் கடன் கொடுக்கப்படுகிறது என்றாலும், அதனைப் பெறுவதில் பல இடர்ப்பாடுகள் இருப்பதாகவே தெரிகிறது. அதுவும் கிராமங்களிலி ருந்துவரும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மேலும் பல சிக்கல்கள் இருப்பது கண்கூடு.

ஒரு காலகட்டத்தில் இடங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. இப்பொழுது இடங்கள் இருந்தாலும்,  சேர்வதில் இடர்ப்பாடுகள் இருப்பது ஆரோக்கியமானதல்ல. தடைகளை, இடையூறுகளை நீக்கிக் கல்வி கற்க முன்வரும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை அரவணைத்து. கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான திட்டங்களை அரசுகள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொருளாதாரம்தான் கல்லூரிகளில் சேருவதற்குத் தடையென்றால், இலவசமாகக் கூட கல்வி கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு, இந்த உதவியைச் செய்வதுகூட சாதாரணமானதாகத் தான் இருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக