திங்கள், 4 ஜூலை, 2011

கோவில்களில் கொள்ளை நகைகள் ஏன்?ஏன்?


கோவில்களில் கொள்ளை நகைகள் ஏன் ஏன்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
இந்தியாவில் உள்ள கோயில்களில் குவிந்து கிடக்கும்  தங்கம், வைரம், அணிமணிகள் இவற்றை அரசு கையகப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் செழித்து, மக்கள் வளமுடன் வாழ முடியும்.
எல்லாம் கடவுள் செயல் என்றும், படைப்புகள் எல்லாவற்றிற்கும் உரியவன் பகவான் என்றும் ஏட்டில் எழுதி வைக்கும் ஆன்மிக சிரோன்மணிகள் பற்றற்ற பகவானுக்காக இப்படி விலை உயர்ந்த பொருள்கள் தூசு படிந்து கிடப்பதுபற்றி என்ன சொல்லுகிறார்கள்?
திருவனந்தபுரம் பத்பநாபசாமி கோயிலில் பாதாள அறைகளில் ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேலான மதிப்புடைய பொருள்கள் குவிந்து கிடக்கின்றன என்று நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன.
இன்னும் ஒரு அறையை மட்டும் திறக்க வில்லையாம். அதனைத் திறந்தால் சாமி குற்றம் ஆகிவிடுமாம். இத்தனை அறைகளைத் திறந்தபோது வராத சாமி குற்றம், குறிப்பிட்ட அறையைத் திறக்கும் பொழுது மட்டும் எங்கிருந்து குதிக்கப் போகிறதாம்!
பொருளாதாரத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிடுவார்கள். ரூபாய்களை எவ்வளவுத் தொகை அளவுக்கு அரசு அச்சடித்து விநியோகம் செய்கிறதோ, அந்த அளவுக்கு மதிப்புள்ள தங்கம் இந்தியாவின் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டும்; அப்பொழுது தான் பண வீக்கம் தடுக்கப்படும் என்று பொரு ளாதாரத்தில் பால பாடமாகச் சொல்லுகிறார்கள்.
இந்தியாவில் பணவீக்கம்பற்றிப் பெரிதும் பேசப் படுகிறது. இந்தியாவில் ஒரு ரூபாயின் உண்மையான மதிப்பு வெறும் 14 காசுகளாக இருக்கின்றன என்றெல்லாம் சொல்லுவதில் குறைச்சல் இல்லை.
இந்தப் பொருளாதாரம் எல்லாம் தெரிந்த மேதைகள் பிரதமராகவும், நிதித்துறை அமைச்சராக வும், திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருக்கும் இந்நாட்டில், கோவில்களில் ஒன்றுக்கும் பயன் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் இந்தத் தங்கங்களை எல்லாம் கையகப்படுத்தினால் என்ன?
மக்களுக்குப் பயன்படாத பணம் குழவிக் கல்லுக்காக குந்த வைக்கப்படுவானேன்? படித்த மக்களிடத்தில் குடி கொண்டிருக்கும் மவுடிகம்தான் மக்களின் வறுமைக்கும், பணவீக்கத்துக்கும் காரணம் என்பது விளங்கவில்லையா?
பக்தி கிறுக்கு பிடித்த மக்கள் கடவுளுக்குக் காணிக்கையைக் குவிக்கிறார்கள் என்பது உண்மை தான். இது ஒரு வகையில் கடவுளை இழிவுபடுத்தும் செயல் என்பதை அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
கடவுளிடத்தில் காணிக்கை என்னும் லஞ்சம் கொடுத்துதான் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதே கடவுள் லஞ்சம் வாங்கக் கூடியவர் என்ற கருத்தில்தானே!
லஞ்சம் வாங்குவதும் குற்றம்; லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் உள்ள நாட்டில் இப்படி பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், லஞ்ச லாவண்யம் அதிகார பூர்வமாக பட்டவர்த்தனமாக ஆனந்த நடனம் புரிகிறதே - இதைப்பற்றி எந்தப் பொது நலவாதிகளும் வாய் திறப்பதில்லையே - ஏன்?
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. வி.ஆர். கிருஷ்ணஅய்யர் வாய் திறந்து இருக்கிறார்: திருவனந்தபுரம் பத்மநாபபுரம் கோயிலில் கொட்டிக் கிடக்கும் பொருள்களை, மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருத்துக் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே ஒரே ஒரு பெரிய மனிதராவது மக்கள் நலக் கண்ணோட்டத்தில் வாய் திறந்துள்ளது - வரவேற்கத்தக்கதாகும்.
ஒரு கால கட்டத்தில் கோயில் சொத்துகள் எல்லாம் புரோகிதச் சுரண்டலுக்கு வாட்டமாக, வசதியாக இருந்ததுண்டு.
நீதிக் கட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் தான் அந்தச் சுரண்டலுக்கு, கோயில் திருட்டுக்கு மூக்கணாங் கயிறு போட்டது என்ற வரலாற்றுக் குறிப்பையும் நினைவூட்டுவது பொருத்த மாகும். பக்தர்களுக்குக் கடைசியாக ஒன்று:
படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே
- இந்தத் திருமந்திரப் பாடல் என்ன சொல்லுகிறது?
ஆண்டவனுக்கு ஒன்று கொடுப்பது நடமாடும் மனிதர்களுக்குக் கொடுப்பது ஆகாது; மனிதர் களுக்கு ஒன்று கொடுப்பதுதான் கடவுளுக்குக் கொடுப்பதாகும் என்று திருமந்திரம் சொல்லுகிறதே - திருமந்திரம் என்ன நாத்திக நூலா? சிந்திப்பீர், பக்தர்களே!

1 கருத்து:

  1. மேறபடி கட்டுரையை தமிழ் ஹிந்து என்ற வலைதளத்தில் பதிவு செய்துள்ளேன்.வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற கருத்துக்கள் ஹிந்து சமய மக்களுக்கு நிறைய தேவை.எனது jaihind.anburaj@gmail என்ற விலாசத்திற்கு கட்டுரைகள் அனுப்பலாம்.

    பதிலளிநீக்கு