ஞாயிறு, 24 ஜூலை, 2011

பா.ஜ.க. தேர்தலில் நிற்க தகுதி உடையதுதானா?


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பாரதிய ஜனதா கட்சி ஆளும் கருநாடக மாநிலத் தில் பகவத் கீதை கட்டாய பாடமாக ஆக்கப் பட்டுள்ளது.

பகவத் கீதை என்பது இந்து மதத்தின் நூல். பிறப்பின் அடிப்படையிலானது - வருணம் - ஜாதி என்பது; அதனை நானே படைத்தேன் - படைத்தவன் நானாக இருந்தாலும் நானே நினைத்தாலும் அதனை மாற்றியமைக்க முடியாது என்று கீதாசிரியன் கிருஷ்ணன் சொல்லியிருப்பதாக பகவத் கீதை சொல்லுகிறது.

பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறிப் பெண்களை இழிவுபடுத்துகிறது.

இத்தகைய பிற்போக்கு நூலை மாணவர்களுக்குக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால், இதைவிட ஆபத்தானது வேறு ஒன்று இருக்க முடியுமா?

இளம் பிஞ்சுகள் மத்தியில் விகற்பத்தை, வேற்றுமையை, வெறுப்பை விதைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது!

பள்ளிகளுக்குப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் அனுப்புவது அறிவை வளர்த்துக் கொள்ளவும் பண்பாடுகளைப் பழகிக் கொள்ளவும் தானே தவிர, ஜாதியின் பெயரால் ஒருவரை ஒருவர் பிரித்து வைத்து வெறுப்பை அறுவடை செய்வதற்கல்ல.

பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தின் வருணாசிரமம் மீதும், ஜாதியின்மீதும் அழுத்தமான நம்பிக்கை உடையதாகும்.

ஆர்.எஸ்.எஸின் தந்தை என்று கூறப்படும் கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughtsஎன்பதுதான் ஆர்.எஸ்.எஸின் வேத நூலாகும்.

அதில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

வருணம் என்று கூறப்படுவது இழிவானது என்ற எண்ணம் நம் மக்களிடத்தில் நிலவுகிறது. அது ஒன்றும் ஏற்ற தாழ்வல்ல; மாறாக சமூக அமைப்பாகும். பிரித்தாளுவதற்காக வெள்ளைகாரர்கள்தான் தவறாகப் பிரச்சாரம் செய்தனர்.

பிராமணர்கள் அறிவுத்திறத்தால் உயர்ந்தவர்கள் சத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில், சண்டைப் போடுவதில் வல்லமையுள்ளவர்கள். வைசியர்கள் என்பவர்கள் விவசாயம் மற்றும் வாணிபம் செய்யக் கூடியவர்கள்.

தங்கள் தொழிலைச் செய்வதன்மூலம் சமூகத்துக்குச் சேவை செய்பவர் சூத்திரர் - இது ஒன்றும் தவறான அமைப்பு முறையல்ல என்கிறது ஆர்.எஸ்.எஸின் வேதநூல்.

இந்தக் கொள்கையை செயல்படுத்துவதே பிஜேபி ஆட்சியின் நோக்கம். அதனைத்தான் கருநாடக மாநிலத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் பிஜேபி ஆட்சி நடக்கிறது. அங்கும் பகவத் கீதை சொல்லித் தரப்படுவதாக ஏற்கெனவே செய்தி வெளியானது.

அரசமைப்புச் சாசனத்துக்கு உண்மையாக இருப்பதாக உறுதி மொழி எடுத்துப் பதவிக்கு வருபவர்கள் அரசமைப்புச் சாசனத்துக்கு விரோதமாக இப்படி நடந்து கொண்டால், அத்தகைய அரசின்மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நீதிமன்றங்கள் தெளிவாகத் தீர்ப்பை வழங்கிட வேண்டும்.

கருநாடக மாநிலத்தில் சிறுபான்மையினர் சம்மேளனம் நீதிமன்றம் சென்றுள்ளது - ஆளுந ரிடமும் புகார் மனு கொடுத்துள்ளது.

முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் - இந்து மதவாதிகள் அடம்பிடித்தனர் அது தோல்வியில் முடிந்தது.

சரஸ்வதி வந்தனா என்கிற கடவுள் வாழ்த்துப் பாடலை அறிமுகப்படுத்த முயன்றார். அப்பொழுது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி என்ற பி.ஜே.பி. பார்ப்பனர் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் அதனை அறிமுகப்படுத்தியபோது, தமிழ்நாட்டிலிருந்து அந்த மாநாட்டில் பங்கேற்ற கல்வி அமைச்சர் இனமானப் பேராசிரியர்  க. அன்பழகன் அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்து வெளி நடப்பு செய்தார். அதன் காரணமாக அந்த முயற்சி கருவிலேயே சிதைக்கப்பட்டது.

ஆனாலும் பா.ஜ.க., தன் பார்ப்பனீயத்தைக் கைவிடக் கூடிய அமைப்பு அல்ல, மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடக்க முயலும் அந்த அரசியல் கட்சி அரசமைப்புச் சட்ட ரீதியில் தேர்தலில் போட்டியிடத் தகுதி உடையதுதானா என்பது குறித்துத் தீர்க்கமான முடிவு தேவை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக