வெள்ளி, 8 ஜூலை, 2011

அவசரகதியில் நடந்து கொள்வது எந்த அரசு


Smaller Font
2010-11ஆம் ஆண்டிலேயே சமச்சீர் கல்வி தொடங்கப் பட்டு விட்டது. சமச்சீர் கல்வியை முதல் வகுப்பில் படித்த மாணவன் இவ்வாண்டு இரண்டாம் வகுப்பில் சமச்சீர் கல்வியைப் படிக்க வேண்டியவன்; கடந்த ஆண்டு 6ஆம் வகுப்பில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தைப் பயின்றவன் இவ்வாண்டு ஏழாம் வகுப்பில் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தைப் படிக்க வேண்டியவன் ஆவான்.

அ.இ.அ.தி.மு.க. அரசு செய்த குளறுபடி காரணமாக அரசியல் காழ்ப்புணர்வு அடிப்படையில் இந்த மாணவர்கள் திண்டாடித் தெருவில் நிற்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் மனப்போக்கைப் பார்த்தால் சமச்சீர் கல்வியை இவ்வாண்டு நடைமுறைப்படுத்த முடியாது. அடுத்த ஆண்டு பார்க்கலாம் என்று தட்டிக் கழிக்கும் நிலையில் தான் அரசின் போக்கு உள்ளது என்பது வெளிப்படை!

அப்படி என்றால் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் கடந்த ஆண்டு படித்த முதல் வகுப்பு மாணவனும், ஆறாம் வகுப்பு மாணவனும் பழையபடி பழைய பாடத் திட்டத்தை யல்லவா படிக்க வேண்டிய நிலைக்குத் துரத்தப்படு கிறான்?

இது எந்த வகையில் சரி? ஓர் அரசே கல்வியில் இப்படிப் பட்ட குழப்பத்திற்கு வித்திடலாமா?

நீதிமன்றத்தில் அரசு என்ன சொல்லுகிறது? சமச்சீர் கல்வியை நாங்கள் கைவிடவில்லை. இப்பொழுது அச்சிடப்பட்டுள்ள நூல்கள் அவசரக் கதியில் தயாரிக்கப் பட்டுள்ளன - தரமாக இல்லை என்று சொல்லுகிறார்கள்.

இப்படி சொல்லுபவர்கள் - இந்தச் சமச்சீர் கல்வி பாடத்  திட்டத்தை அவசரக் கதியில்தானே, சரியாக ஆய்வு செய்யாமல் சரியில்லை என்று மேலெழுந்த வாரியாகச் சொல்லுகிறார்கள்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளரும், வரலாற்றுப் பேராசிரியருமான திரு. அ. கருணானந்தன் இதுகுறித்து என்ன கூறுகிறார்?

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர்கள் கொண்ட குழு மொத்தம் 13 நாள்களில் 4 முறை கூடியது. முதல் கூட்டம் 17.6.2011 அன்று கூடியது. தரம் என்பதை முடிவு செய்யும் அலகுகள் குறித்து விவாதித்தனர். 22.6.2011 அன்று முதற் கட்ட விவாதங்கள் நடந்தன. மறுநாள் 23.6.2011 அன்று முதல் (நகல்) அறிக்கையை பள்ளிக் கல்வி அதிகாரி குழுவில் விநியோகம் செய்கிறார். சில கருத்துரைகள் மற்றும் சில பரிந்துரைகள் பேசப்படுகின்றன.

29.6.2011 அன்று இறுதி அறிக்கையை கல்வித்துறை செயலாளர் குழுவில் முன் வைக்கிறார். அதனை 5.7.2011 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றார்.

சமச்சீர் கல்வித் திட்டம் முந்தைய - திமுக அரசால் அவசரக் கதியில் தயாரிக்கப்பட்டது என்று குறை கூறும் அதிமுக அரசு நான்கே கட்டங்களில் 28,000 பக்கங்களை (எட்டு வகுப்புகளுக்கும் சேர்த்து) அலசி முடிவெடுத்தனர் என்பதை நினைக்கும் பொழுது பெரும் நகைச்சுவையாகத் தான் இருக்கிறது.

உண்மை என்னவென்றால் தி.மு.க. ஆட்சியில் கல்வியாளர் முனைவர் முத்துக்குமரன் தலைமையிலான குழு மூன்று ஆண்டுகள் செலவழித்து அருமையாகத் தயாரித்துள்ளது. மூன்றாண்டு என்பது அதிமுக அகராதியில் அவசர கதியா?

குற்றம் சுமத்துவதில்கூட சீரான போக்கு உண்டா? தரக்குறைவான பாடங்கள் (ளுர-ளுவயனேயசன) என்று ஒரு இடத்தில் கூறுகிறார்கள். இன்னொரு கட்டத்திலே, மாணவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குக் (ழபை ளுவயனேயசன) கடினமாக இருக்கிறது என்கிறார்கள். மனதில் குழப்பம் இருப்பதால் இத்தகைய முரண்பாடுகள் இழையோடுவது தவிர்க்கப்பட முடியாது அல்லவா!

இவர்கள் சொல்லுவதைப் பார்த்தால் குறைந்த தகுதி உள்ள கல்வித் திட்டத்தை அரசு கல்விக் கூடங்களில் நடத்தட்டும். அதிக தரம் தகுதி உள்ள பாடங்களை மெட்ரிக் பள்ளிகள் நடத்தட்டும் என்கிற இடத்துக்குத் தான் வருவார்கள் போலிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ சமச்சீர் கல்வி திட்டம் சரியா, தவறா என்று ஆராயச் சொல்லவில்லை. சமச்சீர் கல்விக்கான பாடங்களில் குறைபாடுகள் இருந்தால் அதனைத் தவிர்ப்பதுபற்றிதான் கருத்துக் கூறியுள்ளனவே தவிர, திட்டத்தை ஓராண் டுக்குத் தள்ளிப் போட எவ்வகையிலும் சொல்லவில்லை.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு விட்ட முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புப் பாடங்களை நீதிமன்ற ஆணை யின் காரணமாக வேறு வழியின்றி (அதிலும் ஆத்தி ரத்தைப் பயன்படுத்தி நல்ல பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன - மறைக்கப்பட்டுள்ளன) ஏற்றுக் கொண்டுள்ளது - அதிமுக அரசு என்பதுதான் உண்மை.

மீதி எட்டு வகுப்புக்குரிய சமச்சீர் கல்விக்கான பாடங்கள் திமுக ஆட்சியில் தயாரிக்கப்பட்டது என்கிற ஒரே காரணத்துக்காக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் உள்பட அனைவரும் அறிந்த ஒன்றே!

கல்வியில் கை வைத்தால் அந்த அரசு காலாவதியாகும் - எச்சரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக