திங்கள், 11 ஜூலை, 2011

ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பாருங்கள்!



எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கல்வியாளர்களைக் கொண்டு மூன்று ஆண்டுகள் உழைத்துத் தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி லாயக்கற்றது என்று ஒரே வரியில் கூறிவிட்டது - அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட மெட்ரிக் கல்வி நிறுவனங்களை நடத்தும் பெரும்பான்மையினர் அடங்கிய குழு.
ஒரு பக்கம் இந்த நிலை என்றால், இன்னொரு பக்கம், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது சமச்சீர் கல்வி என்பதால் அ.தி.மு.க. அரசு நிராகரிக்கிறது.
ஆக,  அரசியலுக்கு அப்பாற்பட்டுக் கருத்தூன்றத் தக்க ஒரு முக்கியமான பிரச்சினையில், அ.தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புக் கண் கொண்டு பார்த்ததால் ஏற்பட்ட  குழப்பம்தான் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினையில், தமது கருத்து என்ன என்பதை நீதிமன்றங்கள் புரிய வைத்தும்கூட, அதையும் தாண்டி ஆத்திரப்படும் இத்தகு அரசியல் பகை உணர்வு நாகரிகமானதல்ல.
குறிப்பிடத்தக்க கல்வியாளர்கள் யாரும் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாடத்திட்டங்களைக் குறிப்பிடத்தக்க வகையில் முத்திரை குத்தி, உதாசீனப் படுத்திவிடவில்லை; ஒரு சில குறைகள், பிழைகளைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்; அவற்றைத் திருத்திக் கொள்ளலாம் என்ற நியாய உணர்வுடன் கருத்து களைக் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. அரசு நிராகரிக்கும் சமச்சீர் கல்விப் பாடங்கள் குறித்த அறிக்கையின் மீது தான் பெரும் பாலான கல்வியாளர்கள் தங்கள் அதிருப்தியினை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமையன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்ற சமச்சீர் கல்வி தொடர்பான கருத்தரங்கில் பங்குகொண்ட கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கட்சிகளைக் கடந்து கருத்துகளைக் கூறியுள்ளனர். எதையும் கருணாநிதி எதிர்ப்பு என்ற கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பதை விட்டு விட்டு, இந்தப் பிரச்சினையில் கல்வியாளர்களின் கருத்துகள் என்ன என்ற பொறுப்புணர்ச்சியுடன் பார்வை செலுத்துவதுதான் ஆட்சியாளர்களுக்கு அழகாக இருக்க முடியும்.
சமச்சீர் கல்வியைக் குறை கூறி 2004-2005ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என்று கல்வியாளர் வே.வசந்தி தேவி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. அரசின் பிரச்சார பீரங்கியான தினமலர் ஏடு - தனது குலதர்மக்  குணத்தை வெளிப்படுத்தி விளக்கங்களைக் கொடுக்க முனைந்துள்ளது. (11.7.2011)
அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறை குறித்து எண் திசைகளிலும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், அரசைக் காப்பாற்றும் கண்ணோட்டத்தில் சிலவற்றை அரையும் குறையுமாக எழுதியுள்ளது.
அதில் ஒரு இடம் கவனிக்கத்தக்கது. சமச்சீர் என்பதே, கீழே இருப்பவர்களை மேலே உயர்த்துவ தாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, மேலே இருப்பவர்களைக் கீழே தள்ளி விடுவதாக அல்ல என்று எழுதுகிறது தினமலர்.
இதே கருத்தைத்தான் வேறு சொற்களால் எழுதுகிறது  துக்ளக்.  எல்லாவகைக் கல்வியையும் கீழே இறக்கி சமன்படுத்துவது சமத்தாழ்வு கல்வி முறை என்று சமச்சீர் கல்வி பற்றி திருவாளர் சோ எழுதியுள்ளார்.
தினமலர், துக்ளக் ஏடுகளில் இந்த ஒன்றுபட்ட கருத்துக்குப் பெரிய விளக்கங்கள், விமர்சனங்கள் தேவைப் படாது.
பார்ப்பானும் - பறையனும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தைப் படிப்பதா...? என்ற நஞ்சுதான் இவர்களின் எழுத்துகளாக பிரசவம் ஆகியிருக்கின்றது.
அவர்கள் எங்கேயோ போய்விட்டார்களாம்; நம் மக்கள்  மிகவும் தாழ் தளத்தில் கிடக்கிறோமாம். அந்த உயரமான இடத்திலிருந்து அவர்களைக் கல்வியின் தரத்தில் கீழே இறக்கிவிட்டதாம் சமச்சீர் கல்வி.
இந்த அக்கிரகார ஆணவக் கொழுப்புதான், அகம்பாவம்தான் அவர்களின் தொண்டையை அடைத்துக் கொண்டு திமிரி நிற்கிறது. இதனைக் கண்டுபிடித்துச் சொல்லுவதற்கு ஈரோட்டுக் கண்ணாடி தேவை!
குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த கூட்டம் குறுக்கு வழியில் சமச்சீர்க் கல்வியைக் குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கிறது - எச்சரிக்கை!  எச்சரிக்கை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக